முன்னாள்அமைச்சர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்-jvp

288 0

தேர்தல்கள் விதியை மீறி, முன்னாள் இராஜாங்க அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் வீடுகளை அரசாங்கம் வழங்கியுள்ளமைக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இதுதொடர்பாக முறைப்பாடை அளித்ததை அடுத்து, ஊடங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிவித்தல்களுக்கு எதிராக, அரசாங்கம் அமைச்சரவைத் தீர்மானமொன்றை தற்போது எடுத்துள்ளது.

அதாவது, முன்னாள் இராஜாங்க அமைச்சர்களுக்கும் உத்தியோகபூர்வ வாகனங்களை வாடகை அடைப்படையில் பயன்படுத்த முடியும் என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை என்பது, உறுப்பினர்களுக்கு வாகனங்களைப் பெற்றுக் கொடுக்கும், வாகன விற்பனை நிலையமா என்று நாம் கேட்க விரும்புகிறோம்.

அப்படியானால், அனைத்து உறுப்பினர்களுக்கும் வாகனங்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து, மொட்டுக் கட்சியினருக்கு மட்டும் இவ்வாறான சலுகைகளை வழங்குவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.

இந்த சலுகைகள் அனைத்தும். மக்களின் வரிப்பணத்தினால் ஆனவை என்பதை அரசாங்கம் மறந்து விடக்கூடாது. வாகனங்கள் மட்டுமல்லாமல், எரிபொருள், சாரதி என அனைத்தையும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ளது.

இது அப்பட்டமான தேர்தல்கள் விதிமீறலாகும். அத்தனை காலமாக மக்கள் வழங்கி வரும் அர்ப்பணிப்புகளுக்கும் இது அவமானமாகும். எனவே, இதனை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் நாம் கேட்டுக் கொண்டுள்ளோம்” என கூறினார்.