இரண்டாக பிளவடைந்துள்ள கட்சியை ஒன்றிணைக்கும் நோக்கத்தில்தான், பொதுத் தேர்தலை பிற்போட வேண்டும் என்ற கோஷத்தை ஐக்கிய தேசியக் கட்சி எழுப்பி வருவதாக சிறிலங்காவின்ஆளும் தரப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சாந்த பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேல் கருத்து தெரிவித்த அவர், “சிறிலங்காவின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சிறிலங்காவின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாட்டுகளினால், இன்றுசிறிலங்காவில் கொரோனா அச்சுறுத்தல் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தனி நபர்களின் தீர்மானங்கள் அன்றி, வெளிநாட்டு தலைவர்கள், சுகாதார அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர் என அனைவருடனும் கலந்தாலோசித்துதான் அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
எனவே, எதிர்த்தரப்பினர் எவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும், அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக மக்கள் நன்றாக அறிவார்கள். கடந்த அரசாங்கம் இந்நேரத்தில் ஆட்சியில் இருந்திருந்தால், நாட்டின் நிலைமை பாரதூரமானதாக இருந்திருக்கும் என்பதையும் மக்கள் அறிவார்கள்.
மக்கள் ஆணையால் ஆட்சிபீடமேறியுள்ள ஜனாதிபதி, இதுவரையான அனைத்து செயற்பாடுகளையும் அரசமைப்புக்கு இணங்கியே மேற்கொண்டு வருகிறார்.
கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீங்காத நிலையில், பொதுத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டிய எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை.
எனினும், பொதுத் தேர்தல் தொடர்பான அச்சத்தில் உள்ள எதிரணியினர், பொதுத் தேர்தலை தொடர்ந்தும் பிற்போடும் நோக்கில் இன்று உயர்நீதிமன்றை நாடியுள்ளனர்.
இரண்டாக பிளவடைந்துள்ளவர்களை மீண்டும் இணைத்துக் கொள்ளும் நோக்கில்தான் ஐக்கிய தேசியக் கட்சி இவ்வாறு செயற்படுகிறது. இந்த பிளவினால், அரசியல் லாபம் பெற்றுக் கொள்ளும் நோக்கில்தான் ஜே.வி.பியும் செயற்பட்டுவருகிறது.
கொரோனாவிலிருந்து நாட்டை முழுமையாக விடுவிக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய சந்தர்ப்பம் இது. இந்த நிலையில், இந்த நேரத்தைப் பயன்படுத்தி அரசியல்லாபம் தேட எந்தத் தரப்பினரும் முற்படக்கூடாது.” என கூறினார்.