கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் அமுலில் உள்ள நிலையில், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய சுகாதார நடைமுறைகள் குறித்து சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
அதற்கமைய பேருந்து அல்லது ரயில்களில் அலுவலகங்களுக்கு செல்வோர் கட்டாயம் சமூக இடைவெளியை பேண வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல் ஒரே பக்கம் பார்த்தவாறு பயணிக்க வேண்டும் எனவும் சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, முச்சக்கர வண்டிகளில் ஓட்டுனர் உள்ளிட்ட இருவர் மாத்திரமே பயணிக்க முடியும் எனவும் பிரத்தியேக வாகனங்களில் செல்வோர் கட்டாயம் அலுவலக அடையாள அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டைகளை வைத்திருப்பது அவசியம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அலுவலகங்களுக்குள் நுழைய முன்னர் கைகளை நன்றாக கழுவி கிருமி தொற்று நீக்கம் செய்வதோடு உடலின் வெப்பநிலையை கணக்கிடுவதும் அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, மின்தூக்கிகளில் பயணிக்கும்போது மிக அவதானமாக செயற்பட வேண்டியது அவசியம் என்பதோடு, அவற்றில் ஒருவருடைய முகத்தை ஒருவர் பார்க்காமல் பயணிக்க வேண்டியது கட்டாயமாகும் எனவும் சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
உணவு உண்ணும்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியது முக்கியம் என்பதோடு முடிந்தளவு தனித்தனியாக உணவு உட்கொள்வதே சிறந்தது எனவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேபோல வேலை முடிந்து வீடு செல்லும்போது மீண்டும் கைகளை நன்றாக கழுவி கிருமி தொற்று நீக்கம் செய்வதோடு, கிருமி ஒழிப்பு கூடாரத்துக்குள் சென்று அணிந்து சென்ற ஆடைகளையும் உடலையும் கிருமி தொற்று நீக்கம் செய்ய வேண்டும் எனவும் சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.