பொறுமையின் இலக்கணமாம் நான்
போற்றுதயா வையமெல்லாம்
உண்மை தான்
என் மடியில் தவழ்ந்து விளையாடிய பிஞ்சுக்குழந்தைகள் பஞ்சுடலெல்லாம்
குண்டடி பட்டு குவிந்து கிடந்த போதும்
பொறுமையாக தானே இருந்தேன்
கருவறை கடந்து கன்னியராகி
கணவாளன் கரம் பிடிக்கும் வரை
நித்தமும் நிலவினில் ஆடி
என் மார்பினில் கண்ணுறங்கி
கனவுகள் பல வளர்த்த
கன்னிப்பூக்களை
காடையர் கற்பழித்து
கசக்கி எறிந்த போதும்
பொறுமையாக தானே இருந்தேன்
தாயும் தமக்கயும் தங்கையும்
தாரமும் தஞ்சமின்றி தவித்த போதும்
தாய் மண்ணே தாகம் என்று
தாவி பாய்ந்த மறவர்
செங்குருதி பெருக்கெடுக்க
சிதறி கிடந்த போதும்
பொறுமையாக தானே இருந்தேன்
ஏர் பூட்டி என்னை உழுது
அன்னமிட்ட அன்னை என்று
எனையேற்ற கூட்டம் இதை
அழித்து ஒழித்த போதும்
பொறுமையாக தானே இருந்தேன்
பொறுமைக்கு இலக்கணம் தான்
நான்
போற்றுதலுக்குரியதோ எனது பொறுமை
இல்லை இல்லை
காலமுள்ள வரை
தூற்றுதலுக்கு உரியதல்லவோ
எனது பொறுமை
வஞ்சகம் சூழ்ந்து வடுக்கள்
சுமந்த போதும்
காத்திருக்கிறேன்
வருங்காலத்துக்கு வரலாற்றை சொல்லிட…
-லக்ஜன்
யாழ்ப்பாணம்