பாகிஸ்தானில் குண்டு வெடிப்பில் சிக்கி 6 ராணுவ வீரர்கள் பலி

295 0

பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி ராணுவ வீரர்கள் 6 பேர் பலியாகினர்.

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாண மக்கள் பல ஆண்டுகளாக தனி நாடு கோரி போராடி வருகின்றனர்.
ஆரம்பத்தில் அறவழியில் தொடங்கிய இந்த போராட்டம், பின்னர் ஆயுதம் ஏந்தி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டது. கடந்த 2000-ம் ஆண்டு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர். அதனை தொடர்ந்து இந்த அமைப்பை, கடந்த 2006-ம் ஆண்டு பாகிஸ்தான் அரசு, பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.
அதன் பிறகு பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்துக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. இதனால் இரு தரப்புக்கும் இடையிலான மோதல் வலுத்தது.
அதன்படி பலுசிஸ்தான் மாகாணத்தில் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்த்தப்படுவது வாடிக்கையாக உள்ளது.
எனவே பலுசிஸ்தானில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் ராணுவ வீரர்கள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பலுசிஸ்தானில் ஈரான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள மலைபிரதேசமான மெக்ரானில் நேற்று முன்தினம் இரவு ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சாலையில் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டை ரிமோட் மூலம் இயக்கி வெடிக்க செய்தனர்.
இதில் சிக்கிய ராணுவ வீரர்கள் வாகனம் வெடித்து சிதறியது. இந்த தாக்குதலில் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் உள்பட 6 ராணுவ வீரர்கள் உடல் சிதறி பலியானார்கள். மேலும் ஒரு ராணுவ வீரர் படுகாயம் அடைந்தார்.
தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும் கூடுதல் ராணுவ வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து, அந்த பகுதியை சுற்றி வளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் படுகாயம் அடைந்த ராணுவ வீரரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் 6 ராணுவ வீரர்களை கொன்ற இந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பு ஏற்றுள்ளது.