போர் விமானங்களின் அணிவகுப்புகளுடன் மட்டுமே நடைபெற்ற ரஷியாவின் வெற்றி நாள் கொண்டாட்டம்

348 0

ரஷியாவில் வெற்றி நாள் கொண்டாட்டங்கள் பிரமாண்டமின்றி வெறும் போர் விமானங்களின் அணிவகுப்புகளுடன் மட்டுமே நடைபெற்றது. இந்த நிகழ்வில் அதிபர் புதின் பங்கேற்றார்.

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் தலைமையிலான ஜெர்மன் நாசிப் படையை ரஷியாவின் ஸ்டாலின் தலைமையிலான செம்படைகள் 1945-ம் ஆண்டு மே 9-ம் தேதி தோற்கடித்தன. இதையடுத்து நாசிப் படைகள் சரணடைந்தன.
இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றான இந்த வெற்றியை, ஆண்டுதோறும் ரஷியா வெற்றி நாளாக கடைபிடிக்கிறது.
இந்த வெற்றி நாள் கொண்டாட்டத்தின் போது ரஷியாவின் ஆயுத வலிமையை வெளிப்படுத்தும் வகையாக ராணுவ அணிவகுப்புகளும், அணு ஆயுதங்கள், போர் விமானங்கள் உள்பட பல்வேறு நவீன ஆயுதங்களின் அணிவகுப்புகள் நடைபெறும்.
இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் பங்கேற்பது வழக்கம். தலைநகர் மாஸ்கோவில் நடைபெறும் இந்த ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள்.
இதற்கிடையில், இந்த ஆண்டு நாசிப் படைகள் தோற்கடிப்பட்டதன் 75-வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட ரஷியா தயாராகி வந்தது. ஆனால் கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் தீவிரமடைந்து வருகிறது.
ரஷியாவிலும் 1 லட்சத்து 98 ஆயிரத்து 676 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. அந்நாட்டில் இதுவரை ஆயிரத்து 827 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் வைரஸ் பரவு வேகத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூட்டமாக கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
போர் விமானங்களின் அணிவகுப்பு
இந்நிலையில், மாஸ்கோவில் உள்ள சதுர்க்கத்தில் நேற்று வெற்றி நாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இந்த கொண்டாடத்தில் பொதுமக்கள் யாரும் பங்கேற்கவில்லை.
மேலும், ராணுவ வாகனங்களின் அணிவகுப்புகள் பெரிய அளவில் எதுவும் நடைபெறாமல் சிறிய அளவிலான படைகளை கொண்டு மட்டுமே ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
ஆனாலும், விமானப்படையினரின் சாகசங்கள் நடைபெற்றது. வெற்றி நாளை கொண்டாடும் விதமாக மாஸ்கோவின் வான் பரப்பில் ரஷிய விமானப்படை அதிநவீன போர் விமானங்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய புதின்
இந்த நிகழ்வில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்றார். போர் விமானங்களின் அணிவகுப்புகளை அவர் கண்டு களித்தார்.
இதையடுத்து இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக கட்டப்பட்டுள்ள நினைவு இடத்தில் மலர்வளையம் வைத்து அதிபர் புதின் மரியாதை செலுத்தினார்.
இதனால் வழக்கமான பிரமாண்ட நடைபெறும் ரஷியாவின் வெற்றி நாள் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு கலை இழந்து காணப்பட்டது.