அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகளான இவாங்கா டிரம்பின் அந்தரங்க உதவியாளருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
2 மாதங்களாக அவர் இவாங்காவுடன் தொலைதொடர்பு சாதனங்கள் வழியாக ஆலோசனை பெற்று பணியாற்றி வந்ததாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன. அவருக்கு கொரோனா தாக்குதலுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது.
இருப்பினும் இவாங்காவும், அவரது கணவர் ஜாரெட் குஷ்னரும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இதில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என தெரிய வந்தது.
ஏற்கனவே அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்சின் ஊடக செயலாளர் கேட்டி மில்லருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது நினைவுகூரத்தக்கது.
இதன் காரணமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தினமும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள முன் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.