மதுக்கடைகளை மீண்டும் திறப்பார்கள்; மக்களே உஷார்! – மதுவுக்கு எதிராகப் போராடும் நந்தினி எச்சரிக்கை

308 0

சட்டக்கல்லூரி முதலாமாண்டு படிக்கும்போதே மதுவிலக்கு கோரி போராடிக் கைதானவர் மதுரை மாணவி நந்தினி. தற்போது படிப்பை முடித்து திருமணமாகி விட்டாலும் கூட அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

மதுவுக்கு எதிராகப் போராடி இதுவரையில் தனது தந்தை ஆனந்தனுடன் சேர்ந்து சுமார் 90 முறை அவர் கைதாகியிருக்கிறார். இப்போது மறு உத்தரவு வரும் வரை மதுக்கடைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பற்றி அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

மே 7- ம் தேதி தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறந்ததும் அதற்கு எதிராக புரட்சியே வெடித்துவிட்டது. ‘எங்களுக்கு டாஸ்மாக் கடைகளே வேண்டாம்’ என்று பெண்களும், சிறுவர்களும்கூட தீவிரமாகப் போராடினார்கள். ‘அந்த வருமானத்தில்தான் எங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறீர்கள் என்றால், அந்த உதவியே வேண்டாம்; இலவசங்களும் வேண்டாம். கடையை மூடு’ என்று அவர்கள் போராடினார்கள்.

இந்த 40 நாட்களில் வேலையும் இல்லை, வருமானமும் இல்லை என்றாலும் ரேஷன் அரிசிக் கஞ்சி குடித்தாவது நாங்கள் நிம்மதியாக இருந்தோம். அதையும் கெடுத்துவிடாதே என்று தொடங்கிய போராட்டம் பெரும் புரட்சியாக மாறும் சூழல் ஏற்பட்டது. இந்த நேரத்தில் கடைகளை மூடுவதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இது மக்கள் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி.

ஆனால், இது தற்காலிகமானதே. என்ன செய்தாவது திரும்பவும் டாஸ்மாக் கடைகளைத் திறந்தே ஆக வேண்டும் என்று முனைப்புடன் செயல்படுகிறது தமிழக அரசு. கண்டிப்பாக அவர்கள் திறந்தே ஆவார்கள். அதற்கு மக்கள் விட்டுவிடக்கூடாது. இப்போது நடந்ததைப் போல 100 மடங்கு வீரியமாக போராட்டங்களை மக்கள் முன்னெடுக்க வேண்டும்.

ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் மது ஆலைகள் சங்கத்தின் தலைவர் வினோத் கிரி என்பவர், மது ஆலைகளும், மதுக்கடைகளும் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தார். உடனே, மோடி துரிதமாகச் செயல்பட்டு ‘மது ஆலைகளும், மதுக்கடைகளும் இயங்கலாம்’ என்று அறிவித்தார். ‘மத்திய அரசின் வழிகாட்டுதலின்படிதான் டாஸ்மாக் கடைகளை நாங்கள் திறந்திருக்கிறோம்’ என்று தமிழ்நாடு அரசின் அமைச்சரான ஜெயக்குமாரே சொல்லியிருக்கிறார். இந்தச் செயலில் மத்திய மாநில அரசுகள் இரண்டுக்குமே பங்கிருப்பதால், கடைகள் மூடியிருப்பதை அவர்கள் விரும்பமாட்டார்கள். நிச்சயமாக மீண்டும் திறப்பார்கள். மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். நாங்களும் போராடுவோம்.”

இவ்வாறு நந்தினி கூறினார்.