தமிழகப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து ஆய்வு

282 0

கரோனா ஊரடங்கால் முடங்கியுள்ள, பாதிக்கப்பட்டுள்ள தமிழக நிதி நிலைமையை மீட்டெடுப்பது குறித்து ஆய்வு செய்து பரிந்துரை அளிக்க ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் தலைமையில் 14 நிபுணர்கள், 10 அரசுத்துறை செயலர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலர் சண்முகம் இன்று வெளியிட்டுள்ள உத்தரவு:

“தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அனைத்துத் துறைகளிலும் முடங்கிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கியமான தொழில்கள், தொழில் நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் அனைத்தும் வழங்கப்பட்ட நிலையில் தமிழகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலை நிலவுகிறது.

தமிழகப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நிபுணர்கள் அடங்கிய உயர்மட்டக் குழு ஒன்றை அரசு அமைத்துள்ளது. அவர்கள் தமிழகப் பொருளாதார நிலைமையை ஆய்வு செய்து தமிழக அரசுக்குப் பொருளாதார மீட்பு குறித்த ஆய்வறிக்கையை 3 மாதங்களுக்குள் சமர்ப்பிப்பார்கள்.

இந்தக் குழுவில் தமிழக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர், தொழிலதிபர்கள், சமூகப் பொருளாதார நிபுணர்கள், பேராசிரியர்கள் உள்ளனர். ஏற்கெனவே கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் உரையின் மீது துணை முதல்வர் தமிழகத்தில் வரி வருவாயைப் பெருக்குவது குறித்த ஆய்வு செய்ய சிறப்புக்குழு ஒன்றை அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையிலும் தற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் இந்தக் கமிட்டி அமைக்கப்படுகிறது.

இதன் தலைவராக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரும், தற்போதைய மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் தலைவருமான சி.ரங்கராஜன் செயல்படுவார்.

முன்னாள் தலைமைச் செயலரும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான என்.நாராயணன், சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி , வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.குமார், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் இயக்குனர் கே.ஆர். சண்முகம், வளர்ச்சி ஆய்வுகள் நிறுவன இயக்குனர் விஜி பாபு, முருகப்பா குழும முன்னாள் தலைவர் வெள்ளையன், இந்தியா சிமெண்ட்ஸ் துணைத்தலைவர் என். ஸ்ரீனிவாசன், டிவிஎஸ் மோட்டார்ஸ் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன், இந்தியன் வங்கி மேலாண் இயக்குனர் பத்மஜா சந்துரு, யுகிவிடாஸ் மேலாண் இயக்குனர் வாசுதேவன், 14-வது நிதிக்குழு உறுப்பினர் கோவிந்தராவ், சென்னை ஐஐடியைச் சேர்ந்த எம்.சுரேஷ் பாபு, யுனிசெஃப் சென்னை ஒருங்கிணைப்பாளர் பினாகி சக்ரவர்த்தி உள்ளிட்டோர் இந்தக் குழுவில் உள்ளனர்.

இதன் ஒருங்கிணைப்பாளராக நிதித்துறைச் செயலர் இருப்பார். மேலும் இந்தக்குழுவில் தொழில்துறை, வேளாண்துறை, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, சிறு, குறு தொழில் துறை, சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, கைத்தறித் துறையைச் சேர்ந்த முதன்மைச் செயலாளர்கள் பங்கு வகிப்பார்கள்.

இந்தக் குழு 3 மாதங்களில் தனது ஆய்வறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும்”.

இவ்வாறு தலைமைச் செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார்.