ரஷ்யாவில் ஒரே நாளில் 104 பேர் பலி – கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது

287 0

ரஷ்யாவில் தொடர்ந்து 7 நாட்களாக 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது.

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
ரஷ்யாவில் கொரோனா வைரசை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அதிபர் புதின் எடுத்து வருகிறார்.
தற்போது ஊரடங்கின் ஐந்தாவது வாரத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக எண்ணெய் மதிப்பு சரிந்துள்ள நிலையில் ரஷ்யா கடும் பொருளாதாரா நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது.
குறிப்பாக, கடந்த 7 நாட்களில் அந்நாட்டில் புதிதாக 70,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,817 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1,98,676 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இதுவரை அங்கு 1,827 பேர் உயிரிழந்துள்ளனர்.