த.தே.கூட்டமைப்பினர் மற்றவர்களைப் போல் அரசியல் சராணாகதி அடைந்தவர்கள் அல்லர்- சிவமோகன்

371 0

தமிழ் தேசிய கூட்டமைப்பினர், மற்றவர்களைப் போல் அரசியல் சரணாகதி அடைந்தவர்கள் அல்லர்  என கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திகலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பாக அரசாங்கத்துடன் அண்மையில் சந்திப்பொன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டிருந்தது. அதனை சில அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்திருக்கும் நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுகுறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காலத்திற்கு காலம் தமிழ் மக்களின் ஏகோபித்த குரலாக ஒலித்து தனது சேவையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்து வருகிறது.

இன்று தமிழ் மக்களுக்காக அனைத்து பிரச்சினைகளையும் திரைமறைவு நாடகங்களையும் வெளிக்கொண்டு வருவதற்காக தற்போது செயற்பாட்டில் உள்ள அரசாங்கத்ததுடன் நியாய பூர்வமான கலந்துரையாட வேண்டிய கடமை தமிழ் மக்கள் சார்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடையதே.

அந்தக் கடமையை சரியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது அண்மையில் மஹிந்த ராஜபக்ஷவுடனான கொரோனா தொடர்பான அவர்களது சந்திப்பால் தங்களது அரசியல் அடிபட்டு விடுமோ என்ற பயத்தில் பிதற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.

தங்களது சொந்தமான அரசியலை முன்னகர்த்த முடியாத, தமிழ் மக்கள் விரோத வங்குரோத்து கட்சிகள் அனைத்தும் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை புறணி சொல்லத் தொடங்கியிருக்கின்றன.

அவர்களின் கருத்துக்களில் இருந்தே தமிழ் மக்களின் ஏகோபித்த அமைப்பு மற்றும் பாதுகாப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பது மக்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது.

ஆகவே இவ்வாறான போலி முகவர்களுக்கு தமிழ் மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.