கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்தில் கொண்டு விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகளை அடுத்த மாதம் முழுமையாக தளர்த்துவதை சிறிலங்கா அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 11 திகதி அன்று கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்படவுள்ளதுடன் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி மக்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
அதன் பிரகாரம் மே 11 க்குப் பின்னர் ஏற்பட்ட முன்னேற்றத்தைப் பொறுத்து ஜூன் மாத தொடக்கத்தில் அனைத்து கட்டுப்பாடுகளையும் மொத்தமாக நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சர் ஒருவரை மேற்கோளிட்டு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மார்ச் 11 அன்று கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதல் இலங்கையர் அடையாளம் காணப்பட்டார். இதனை அடுத்து கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த பின்னர் மார்ச் மாதத்தில் அரசாங்கம் ஊரடங்கு உத்தரவுவை விதித்தது.
இந்நிலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நாடுகள் தமது வணிக செயற்பாடுகளை மீண்டும் ஆரமப்பித்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கமும் மீண்டும் பொருளாதார நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.