சென்னையில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முயன்ற மருந்தாளுநர் அவர் கண்டுபிடித்த மருந்தை குடித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பிரபல மூலிகை மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் பொது மேலாளராகவும் மருந்தாளுனராகவும் பணியாற்றி வந்தவர் சிவனேசன் (வயது 47). இந்த நிறுவனம் இயற்கை மற்றும் ஆயுர்வேத பொருட்களை தயாரித்து வருகிறது. 20 ஆண்டுகளுக்கும் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த சிவனேசன் பல்வேறு மருந்து கண்டுபிடிப்பில் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் சிவனேசன் ஈடுபட்டுள்ளார். இதற்கான சோடியம் நைட்ரேட் கலந்த ஒரு மருந்தை உருவாக்கி உள்ளார். இதையடுத்து வியாழக்கிழமை அன்று அந்த மருந்தை நிறுவன உரிமையாளரான டாக்டர் ராஜ் குமாரின் வீட்டில் வைத்து சோதனை செய்ய முயற்சித்துள்ளனர். முதலில் டாக்டர் ராஜ் குமார் மருந்தை சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்துள்ளார். ஆனால், 10 நிமிடங்களில் அவர் சுய நினைவுக்கு திரும்பியுள்ளார்.
இதனால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது, மருந்தை பயன்படுத்தலாம் என்ற நம்பிக்கை வந்துள்ளது. சிவனேசனும் மருந்தை உட்கொண்டுள்ளார். அவரும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். ஆனால் அவர் மயக்க நிலையில் இருந்து மீளவில்லை. உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிவனேசன் உயிரிழந்தார்.
கொரோனா மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மருந்தாளுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருந்து தயாரிப்பில் சிவனேசனுடன் டாக்டர் ராஜ் குமாரும் இணைந்து செயல்பட்டாரா? என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.
சிவனேசனுக்கு சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆகும். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.