தமிழ் முஸ்லிம் மக்கள் இன்னும் பல தியாகங்களைச் செய்து அரசியல் சமூக ரீதியில் ஒன்றிணைய வேண்டும் என கிழக்கு முதல்வர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
ஏறாவூர் வாவிக்கரையோர மர்{ஹம் செய்னுலாப்தீன் ஞாபகார்த்த ஓய்வுப் பூங்காவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
கிழக்கின் ஐக்கியமிக்க இந்த மாகாண சபை நல்லாட்சி இந்த நிருவாகத்தோடு மட்டும் முடிந்து விடக்கூடாது.
அது இப்பொழுதிருப்பதைப் போல் எதிர்காலத்திலும் தொடர வேண்டும்.
அவ்வாறு ஒரு சரித்திரம் படைப்பதற்கு அனைவரும் முன்வரவேண்டும்.
மாகாண சபைகளுக்கான சகல அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்ட ஒரு மாகாண சபையாக இந்த மாகாணத்தை மாற்றி விட்டுத்தான் நாங்கள் விலகிச் செல்வோம் என்பதிலே இந்த மாகாணத்தை தற்போது ஆளுகின்ற தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்கள் கூட்டிணைந்த நிருவாகம் திடசங்கற்பம் கொண்டுள்ளது.
எதிர்காலத்திலே இந்த மாகாணத்தை எந்த சமூகத்தைச் சேர்ந்த எந்தக் கட்சிக் காரரும் ஆளலாம். ஆனால் அவர்கள் அதிகாரமற்ற வெறும் பொம்மை ஆட்சியாளர்களாக இருக்கக் கூடாது என்பதே எனது அவாவாகும்.
மத்திய அரசில் ஒரு நல்லாட்சி இடம்பெறுகின்றபோதும் அதனையும் விட சிறந்ததொரு நல்லாட்சி கிழக்கு மாகாண சபையிலேதான் நடைபெறுகிறது.
இப்பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலமுகா, ஐக்கிய தேசியக் கட்சி, மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் தலைமைகள் ஒற்றுமைப்பட்டிருப்பது போன்று மக்கள் மத்தியிலும் இன மத வேறுபாடுகளைக் கடந்த ஒற்றுமை ஏற்பட வேண்டும்.
அப்பொழுதுதான் எம்முன்னே கோர்வையாக நிற்கின்ற சவால்களை முறியடிக்க முடியும்.
இல்லாவிட்டால் இப்பொழுதிருக்கின்ற ஐக்கியப்பட்ட இந்த சமூகத்தை இன மத மொழி பிரதேச வேறுபாடுகள் அடிப்படையில் கணப்பொழுதில் குழப்புதற்கு தீய சக்திகள் கங்கணம் கட்டி நிற்கின்றார்கள். நாம் பல தியாகங்களின் மூலம் அடையப் பெற்ற இந்த ஐக்கியத்தைச் சீர்குலைப்பதற்கு தீய சக்திகளுக்கு நாம் வாய்ப்பளித்து விடக் கூடாது.
எல்லாக் கட்சிகளும் எல்லா சமூகங்களும் இணைந்து மிகவும் வெளிப்படைத் தன்மையாக, ஒழிவு மறைவு, வேறுபாடுகள், புறக்கணிப்புக்கள் இன்றி, எல்லா இடங்களையும், இனங்களையும், மதங்களையும், சமமாக மதித்துப் பங்கீடு செய்கின்ற ஒரு நிலைப்பாட்டிலே நாம் கிழக்கு மாகாண சபை நிருவாகத்தில் ஒன்றித்து செயற்பட்டு வருகின்றோம்.
கடந்த யுத்த கால விரிசல்களளால் சின்னாபின்னப்பட்டு சிதைந்து போயிருந்த சமூகங்கள் இப்பொழுது இணைந்து செயலாற்றுவதை எவரும் கொச்சைப்படுத்திவிட முடியாது. இதைக் கேள்விக்குட்படுத்தவும் முடியாது.
திட்டமிட்ட சதிகளால் பிரிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களை இணைந்து வாழச் செய்கின்ற பொறுப்பு அரசியல்வாதிகள், அதிகாரிகள், அடிமட்ட மக்கள் என எல்லோருக்கும் உண்டு.
இது ஒன்றும் இலேசுப்பட்ட காரியமல்ல, இன ஒற்றுமையை வளர்ப்பதற்காக பாரிய சவால்களுக்கு முகம்கொடுத்தோம், தொடர்ந்தும் அத்தகைய சவால்களை உள்ளும் புறமும் எதிர்கொண்டுதான் வருகின்றோம்.
எங்களது வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த கிழக்கு மாகாண நல்லாட்சியைச் சீர்குலைப்பதற்காக உள்ளும் புறமும் கட்சிக்குள்ளேயும் வெளியேயும் பல்வேறு சதித்திட்டங்களும் சூழ்ச்சிகளும் இடம்பெற்றுக் கொண்டுதானிருக்கின்றன.
இருந்தாலும், நாங்கள் மனம் சளைக்கவில்லை, உறுதியுடனிருந்து தியாகம் செய்து இன ஒற்றுமையைப் பலப்படுத்தி வருகின்றோம்.
கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டால் நமது மாகாணம் தேசிய ரீதியில் ஒற்றுமையிலும் பொருளாதார வளர்ச்சியிலும் இலங்கைக்கே ஒரு முன்னுதாரணமாக விளங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.