ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஜூன் மாதம் 20ஆம் திகதிக்கு நாள் குறிக்கப்பட்ட பொதுத் தேர்தல், அன்று முதல் 3 அல்லது 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக, சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது.
அந்த வகையில், ஜூலை 4ஆம் திகதியன்றே தேர்தலை நடத்துவதற்கான மிக நெருங்கிய காலப்பகுதியாயினும், தேர்தலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் போதிய நாள்கள் தேவைப்படுவதால், ஜூலை 4ஆம் திகதியன்றும் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இல்லையென்றும் தெரிவித்தது.
இது தொடர்பில் தமிழ்மிரருக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும, எவ்வாறாயினும் இம்மாதம் 11ஆம் திகதியன்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தலைமையில் நடைபெறவுள்ள கட்சிகளின் செயலாளர்களுடனான சந்திப்பின் போதே, தேர்தல் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றார்.
இதேவேளை, தேர்தல் நடக்குமா நடக்காதா என்பது ஒருபுறமிருக்க, தேர்தல் தொடர்பான அன்றாட நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணைக்குழு முன்னெடுத்து வருவதாகத் தமிழ்மிரருக்குத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுள் ஒருவரான ரட்ணஜீவன் ஹூல், தேர்தல் முறைகளை எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்பது தொடர்பான பணிகளையும் தேர்தல் செயலகப் பணியாளர்கள் முன்னெடுத்து வருவதாகக் கூறினார்.
அவ்வாறு தேர்தல் முறைகளை மாற்றுவது குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டாலும், இறுதியில் அது ஆணைக்குழுவிடமே அங்கிகாரத்துக்காக வருமென்றார்.
குறிப்பாக, வாக்களிக்க வருபவர்களின் விரல்களுக்கு மை பூசும் கட்டாயமுள்ளது. ஆனால் தற்போதைய கொரோனா சூழ்நிலையில் அது சாத்தியப்படாது என்பதால், மைக்கு பதிலாக ஒரு வகை ஸ்பிரே அடிப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும் ஆனால், அந்த ஸ்பிரே அடிக்கும் போது அது முழு கைக்கும் படுவதால், இது தொடர்பில் பரிசீலனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த விடயங்கள் குறித்துக் கலந்துரையாட, இந்த மாதம் 11ஆம் திகதியன்று, ஆணைக்குழுவில் விசேட கூட்டமொன்று நடைபெற இருப்பதாகவும் இதில், தேர்தல் ஆணைக்குழு அங்கத்தவர்கள், தேவையேற்படின் தேர்தல் முறைகளில் மாற்றங்களை கொண்டு வருவதற்காக செயற்படுபவர்களும் அழைக்கப்படுவார்கள் என்றார்.
இந்தக் கலந்துரையாடல், 12ஆம் திகதியே நடைபெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், 12ஆம் திகதி தேர்தலை பிற்போடுவது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு வருவதால், இந்தக் கலந்துரையாடலை 11ஆம் திகதிக்கு ஆணையாளர் மாற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தேர்தலைப் பிற்போடுவது தொடர்பாக ஆணைக்குழுவின் உறுப்பினர்களைப் பிரதிவாதியாகக் குறிப்பிட்டு, இதுவரை தனக்கு 3 நோட்டீஸ்கள் வந்துள்ளதாகவும், ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்தார்.
கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடல்
இந்த மாதம் 11ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாகத் தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, இந்தக் கலந்துரையாடலுக்கு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கூட்டணிகளாகப் போட்டியிடும் கட்சியின் தலைவர்களையே அழைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் ஆணைக்குழுவில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கலந்துரையாடலுக்கு, 4, 5 கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணிகளில் ஒருவருக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தால், நடைபெறவுள்ள கலந்துரையாடலில் முன்னணிகளாகப் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.