சிறைக்கு செல்லவும் தயார்!-பந்துல

323 0

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், அரச செலவுகளைச் செய்வதற்கு, அரசமைப்பில் சிறிலங்கா ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த வகையில், நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி, புதிய நாடாளுமன்றம் கூடியது முதலான மூன்று மாதங்கள் வரையில், அந்த அதிகாரம் ஜனாதிபதிக்குக் காணப்படுவதாகவும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்தது.

அதை ஏற்றுக்கொள்ளாத எவரும், உயர் நீதிமன்றத்துக்குச் சென்று, ஜனாதிபதிக்குள்ள அந்த அதிகாரத்தைச் சவாலுக்கு உட்படுத்த முடியுமென்றும் கூறிய அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன, அரச செலவுகளை மேற்கொள்வதற்கு, ஜனாதிபதிக்கோ அல்லது அமைச்சரவைக்கோ அதிகாரம் இல்லை என்று உயர் நீதிமன்றத் தீர்ப்பளிக்குமாயின், அந்தக் குற்றத்தை ஏற்றுக்கொண்டு சிறை செல்லவும் தாங்கள் தயாரென்றார்.

இதேவேளை, அரச ஊழியர்கள், தங்களுடைய மே மாதத்துக்கான சம்பளத்தின் ஒரு பகுதியை, கணவரை இழந்தோர் மற்றும் அநாதரவானோர் நிதியத்துக்கு வைப்பிலிடுமாறு, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர விடுத்த கோரிக்கை தொடர்பில் சில தரப்பினர் முன்வைத்துவரும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என, அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

சிறிலங்கா முகங்கொடுத்திருக்கும் பிரச்சினைக்கு மத்தியில், ஜனாதிபதியின் செயலாளர் என்ற ரீதியில், அரச அதிகாரிகளிடம் இவ்வாறான கோரிக்கையை முன்வைக்க அவருக்கு அதிகாரம் உள்ளதென்று, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (08) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில், அமைச்சர் கூறினார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அமைச்சர், மேற்படி கோரிக்கையானது, ஜனாதிபதியின் செயலாளரது தனிப்பட்ட கோரிக்கையென்றும் இது தொடர்பில் அவர், தனிப்பட்ட ரீதியிலான கோரிக்கை என்று குறிப்பிட்டே கடிதம் அனுப்பியுள்ளார் என்றும் கூறினார்.

இவ்வாறு கோரிக்கை விடுப்பதற்கு முன்னர், செயலாளரும் தனது சம்பளத்தின் ஒரு பகுதியை நிதியத்துக்கு வழங்கிவிட்டே, ஏனைய அரச ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்றும் அவ்வாறு வழங்காதிருப்பதற்கும், அரச அதிகாரிகளுக்கு முழுமையான சுதந்திரம் உள்ளதென்றும் ஆனால் பெரும்பாலானவர்கள் நிதிக் கொடை அளித்துள்ளனர் என்றார்.