சிறிலங்காவில் கொரோனா வைரஸ் நிதி தவறாக கையாளப்படுகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னபெரும குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கொவிட் 19 இற்கு எதிரான நடவடிக்கைகளிற்காக பெறப்பட்ட வெளிநாட்டு நிதி தவறாக பயன்படுத்தப்படுகின்றதா என்ற சந்தேகம் எதிர்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.
எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் வெளிநாட்டு நிதி மக்கள் மத்தியில் சென்றடைவதை கவனிக்கவேண்டிய பொறுப்பு அதற்கு உள்ளது. சுனாமி நெருக்கடியின் போது இடம்பெற்றது போன்று நிதி தவறாக பயன்படுத்தப்படுகின்றது. இது குறித்து வெளிப்படைதன்மையில்லை.
நாடாளுமன்றத்தை கூட்டுவதன் மூலம் இந்த விடயத்திற்கு அமைதியான முறையில் தீர்வை காண்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முயல்கின்றது. இதன் மூலம் இந்த நிதிகள் குறித்த வெளிப்படை தன்மை பற்றி விவாதிக்க முடியும்.
அரச நிதி குறித்து நாடாளுமன்றத்திலேயே விவாதிக்க முடியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட பிரதிநிதிகளே கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை குழப்புகின்றனர். எதிர்கட்சிகள் குழப்பவில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.