பாாிய கசிப்பு முகாம் முற்றுகை

300 0

மட்டக்களப்பு வாகரை கதிரவெளி முகத்துவார காட்டுப் பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் இயங்கி வந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையமொன்று முற்றுகையிட:ப்பட்டதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

இராணுவ புலானாய்வுப் பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து நேற்று மாலை  குறித்த பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல் பணியின் போது நீண்ட காலமாக இயங்கி வந்த இவ் நிலையம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் போது கசிப்பு உற்பத்திக்கான கோடா எனப்படும் மதுசாரம் நிறைந்த 7 பரல்கள் மற்றும் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உற்பத்தி பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர்கள் தப்பி ஓடியுள்ளதாகவும் இவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் கூறினர்.

இவ் உற்பத்தி நிலையத்தில் இருந்தே வாகரை,வாழைச்சேனை மற்றும் திருகோணமலை மாவட்ட எல்லைக் கிராமங்களுக்கு கசிப்பு எனப்படும் வடி சாராயம் வினியோகம் செய்யப்பட்டு வந்ததாகவும் பொலிசார்  தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் வாகரை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.