அதிகார அரசியல்வாதிகளுக்கு புதுவகையான வைரஸ் தொற்று- அசாத் சாலி

330 0

அதிகார அரசியல்வாதிகளுக்கு புதுவகையான தேர்தல் வைரஸ் தொற்றியுள்ளதால், கொரோனா வைரஸின் தாக்கத்தை அவர்கள் பெரிதாக பொருட்படுத்துவதாகத் தெரியவில்லையென சிறிலங்காவின் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் குறிப்பிடுகையில், “பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றிட வேண்டும் என்பதில் கச்சிதமாகக் காய்நகர்த்தும் இவர்கள், பெரும்பான்மை சிங்கள வாக்குகளைக் குறிவைத்து முஸ்லிம்கள் மீது வஞ்சம் தீர்த்து வருகின்றார்கள்.

முஸ்லிம் ஜனாசாக்களை எரித்துத்தான் ஆக வேண்டுமென அடம்பிடித்து, அதனைச் சரியாகச் செய்துவரும் இவர்கள், கொரோனா பீடிக்காத மட்டக்குளி பாத்திமாவையும் வேண்டுமென்றே எரித்துச் சாம்பராக்கிவிட்டார்கள்.

தகனக் கிரியைகளில் பாத்திமாவின் கணவர் உட்பட குடும்பத்தினர் பங்கேற்பதைத் தடுத்து, அவர்களை இழுத்துக்கொண்டு தனிமைப்படுத்தல் முகாமுக்குக் கொண்டுசென்ற கொடூரத்தை நாம் பார்க்கின்றோம்.

தற்போது மருத்துவ ஆய்வுகூட உயரதிகாரி ஒருவரின் தகவலின்படி, 13 பேரினது கொரோனா பரிசோதனை அறிக்கைகள் பிழையானது எனவும், அதாவது அவர்களுக்கு கொரோனா இல்லையென்றும் தெட்டத்தெளிவாக, பகிரங்கமாகக் கூறியுள்ளார்.

இதற்கெல்லாம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் துணைத் தலைவராக பதவியைப் பொறுப்பேற்கவுள்ள டொக்டர் அனில் ஜாசிங்க பதில் கூறவேண்டும்.

சுகாதார அதிகாரிகள் மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகள் கூறுவதையும் எடுத்த முடிவுகளையுமே நடைமுறைப்படுத்துவதாகக் கூறும் அரசாங்கம், எப்போதாவது அதிகாரிகளுக்கு அடங்கி நடந்திருக்கின்றதா?

தேர்தலுக்கு இவர்கள் அவசரப்படுவதன் நோக்கம், நாட்கள் போகப்போக தெரியவரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.