சீன மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது- ஜின்பிங் எச்சரிக்கை

295 0

சீனாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதற்காக, சீன மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது என்று சீன அதிபர் ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கொரோனா வைரஸ் முதலில் தோன்றிய சீனாவில், தற்போது அதன் பாதிப்பு குறைந்து வருகிறது. அதனால், சீனாவில், இதுவரை அபாய பகுதிகளாக இருந்த பிராந்தியங்களையும் குறைந்த அபாய பகுதிகளாக சீன அரசு தரம் குறைத்துள்ளது.

தற்போது, அனைத்து பிராந்தியங்களும் குறைந்த அபாய பகுதிகளாக விளங்குகின்றன.

சீனாவில் முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட ஹுபெய் மாகாணத்திலும், அதில் உள்ள வுகான் நகரிலும் கடந்த 33 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு வரவில்லை.

ஆனால், நேற்று முன்தினம் எந்த அறிகுறியும் இல்லாமல் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இத்துடன், அறிகுறி இல்லாமல் கொரோனா தாக்கியவர்கள் எண்ணிக்கை 880 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை.

இதற்கிடையே, கொரோனா தடுப்புக்கான மத்திய வழிகாட்டுதல் குழுவின் கூட்டத்தில் சீன அதிபர் ஜின்பிங் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதற்காக பொதுமக்கள் அலட்சியமாக, விழிப்பின்றி இருக்கக்கூடாது.

கொரோனா இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. சில பகுதிகளில் புதிதாக சிலருக்கு தொற்று வந்து கொண்டிருக்கிறது. எனவே, நிச்சயமற்ற தன்மைதான் இருந்து வருகிறது.

ஹுபெய் மாகாணத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தளர்த்தக்கூடாது.

அதே சமயத்தில், மத்திய வழிகாட்டுதல் குழுவின் செயல்பாடுகள் பாராட்டுக்கு உரியவை. கொரோனாவை தடுப்பதில் இக்குழு சிறப்பாக செயல்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.