மகாராஷ்டிர மாநிலத்தில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய புலம்பெயர் தொழிலாளர்கள் மீது சரக்கு ரெயில் மோதியதில் 17 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.
மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் அருகே உள்ள கர்மாட் அருகே நேற்று இரவு புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தண்டவாளத்தில் படுத்து தூங்கினர். இன்று அதிகாலையில் அந்த வழித்தடத்தில் வந்த சரக்கு ரெயில் அவர்கள் மீது மோதியது. இதில் குழந்தைகள் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
மகாராஷ்டிராவில் தங்கியிருந்த மத்திய பிரதேச மக்கள் (பெரும்பாலும் புலம்பெயர் தொழிலாளர்கள்), சொந்த ஊருக்கு செல்லும் ரெயிலை பிடிப்பதற்காக, ஜல்னா பகுதியில் இருந்து புவசால் நோக்கி நடந்து சென்றுள்ளனர்.
ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் எந்த ரெயிலும் வராது என்று நினைத்த, தொழிலாளர்கள் தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர். நேற்று இரவில் வெகுநேரம் நடந்த களைப்பில் அனைவரும் தண்டவாளத்தில் படுத்து தூங்கி உள்ளனர். இதனால் இன்று அதிகாலையில் சரக்கு ரெயில் வந்தபோது அவர்கள் சுதாரித்து எழுவதற்குள் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.