டாஸ்மாக் திறந்த முதல் நாளில் ரூ.170 கோடிக்கு மது விற்பனை

298 0

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் முதல் நாளில் ரூ.170 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.கொரோனா மிரட்டலுக்கு இடையே, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன.

இதைத்தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

இதையடுத்து, தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் நேற்று முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மதுக்கடைகளை திறக்க தடை இல்லை என்று நேற்றுமுன்தினம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மதுபிரியர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இந்தநிலையில் 43 நாட்களுக்கு பின்னர், சென்னை நீங்கலாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் நேற்று ‘டாஸ்மாக்’ கடைகள் திறக்கப்பட்டன.

தமிழகத்தில் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மதுக்கடைகள் திறந்த நிலையில் முதல் நாளிலேயே ரூ.170 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

அதிகபட்சமாக மதுரையில் ரூ. 37 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை புறநகர் பகுதியில் ரூ.34 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.32 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.33 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ. 34 கோடியும் மது விற்பனையாகியுள்ளது.

தீபாவளி, புத்தாண்டு தினங்களில் ரூ. 120 கோடி முதல் ரூ.200 கோடி வரை மது விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.