கப்டன் பண்டிதரின் தாயாருக்கு வீடு அமைத்து கொடுத்தது யாழ்.எயிட் நிறுவனம்!

296 0

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் கப்டன் பண்டிதரின் குடும்பத்திற்கு யாழ். எயிட் நிறுவனம் தற்காலிக வீடொன்றை அமைத்து, அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

புலிகளின் ஆரம்பகால உறுப்பினரான பண்டிதர் நிதி மற்றும் ஆயுதப் பராமரிப்பு பிரிவுகளுக்கு பொறுப்பாக இருந்தவர். தேசியத் தலைவருக்கும் தளபதிகளுக்கும் நெருக்கமான பிணைப்புடன் இருந்து போராட்டத்தை வளர்த்தெடுத்தவர்.

1985 ஆம் ஆண்டு அச்சுவேலியில் நடைபெற்ற இராணுவ சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவடைந்தார்.

கப்டன் பண்டிதரின் தாயார் சின்னத்துரை மகேஸ்வரியும் இரண்டு சகோதரர்களும் யாழ்ப்பாணம் – வடமராட்சி கம்பர்மலையில் வசித்து வந்த நிலையில் இவர்களில் ஒரு சகோதரன் 2006 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவர்கள் தங்கியுள்ள வீடு தமக்கு உரியது என பிறிதொரு குடும்பம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

நீண்ட காலமாக நடைபெற்ற இந்த வழக்கு தீர்ப்பின் பிரகாரம் குறித்த வீடு உரிமை கோரிய குடும்பத்திற்கு சொந்தமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸார் மற்றும் உரிமை கோரிய தரப்பினர் அந்த வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை அனைத்தையும் வெளியில் தூக்கி வீசி, பண்டிதரின் குடும்பத்தையும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

சம்பவத்தை அறிந்து பண்டிதரின் குடும்பத்தை சந்தித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் அக் குடும்பத்தினருக்கு சொந்தமான காணியில் தற்காலிக வீடு அமைத்து பின்னர் நிரந்தர வீடு அமைத்துக் கொடுக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்திருந்தனர்.

இந்நிலையில், யாழ்.எயிட் அமைப்பு குறித்த குடும்பத்திற்கு தற்காலிக வீடு ஒன்றை அமைத்து கொடுத்ததுடன், அங்கு அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

தமிழினத்திற்காக தன்னை அர்ப்பணித்த வீரப் புதல்வனைப் பெற்றெடுத்த தாயார் படும் துயர் கண்டு அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய யாழ் எயிட் அமைப்பின் பணியை தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மெச்சியுள்ளனர்.