மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மட்டக்களப்பில் சுமனரத்ன தேரரால் மேற்கொள்ளப்பட்டு வரும் இனத்துவேசச் செயல்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், குறித்த பிக்குவின் அட்டகாசம் குறித்து சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
குறிப்பிட்ட பிக்கு மிகவும் அநாகரிகமானவும், ஆவேசமாகவும் இனவாதமாகவும் நடந்துகொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் குறிப்பிட்டார்.
அரச அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, தாக்குதல் நடத்தவும் முயன்றதாக சபையின் கவனத்திற்கு கொண்டுவந்த யோகேஸ்வரன், பௌத்த மதத்திற்கும், தமிழ் பேசும் மக்களுக்கும் இழிவை ஏற்படுத்தும் விதமாக நடந்துகொண்ட இந்தப் பிக்கு மீது சட்ட நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.