மே ஏழாம்நாள் நினைவிலே முள்ளிவாய்க்கால்.
********
நல்லவரின் ஆட்சியதில் எல்லையின்றிப் பறந்தவர்கள்…
பாதுகாப்பின் இடங்களெனப் படைத்தரப்பும் சொன்னவுடன்
செய்யவழி ஏதுமின்றி எமன்கூற்றை நம்பியதாய்…
அன்றங்கே அடைபட்டு இன்னல்களில் இறந்தனரே!
வடக்கே கடலேரி வட்டுவாகல் தெற்காக..
மேற்கே வயலோடு கிழக்கெங்கும் கடலாக…
எல்லையெங்கும் பேயாட்டம் எங்கள்மேலே எறிகணைகள்…
முள்ளவாய்க்கால் ஊரில்தான் முடிகிறதோ எம்வாழ்வும்!
உடுதுணி ஆடைகளெல்லாம் உரிய பயன் அற்றங்கே…
உயிர்காக்க எங்களுக்கோ பதுங்குகுழிப் பைகளாச்சு…
கனமழை ஒன்றுவந்து குழிகளெல்லாம் மேவிநிற்க….
இனியென்ன செய்வதென்று தவளைகளாய்த் தத்தளித்தோம்!
மண்போட்டு மூடிவந்த உறவுகளின் உடல்களெல்லாம்…
ஊதிப் பெருத்தங்கே உள்ளிருக்க முடியாது
மண்முட்டி வெளிவரும் வித்தின் முளைபோல…
கைகாலை நீட்டியங்கே கலக்கமுற வைத்தனவே!
யார் கண்டார்? யார் கேட்டார்?
மே ஏழாம்நாள் நினைவிலே அது முள்ளிவாய்க்கால்.
-வன்னியூர் குரூஸ்-