விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் வாயுக்கசிவு- 3 பேர் மரணம், நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு

334 0

விசாகப்பட்டினம் அருகே ரசாயன ஆலையில் வாயுக்கசிவு ஏற்பட்டதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்ட நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில் எல்ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து இன்று காலையில் ரசாயன வாயு கசிந்து வெளியேறி உள்ளது. அதிக அழுத்தத்துடன் வெளியேறிய வாயு, ஆலைக்கு வெளியே பல மீட்டர் தொலைவுக்கு பரவியது.
இந்த வாயுவை சுவாசித்ததால் சாலையில் நடந்து சென்றவர்கள், வீடுகளில் இருந்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிலர் மயங்கி விழுந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், மாநில மற்றும் தேசிய பேரிடர்  மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒரு குழந்தை உள்ளிட்ட 3 பேர் மரணம் அடைந்தனர்.
வாயுக்கசிவு காற்றில் வேகமாக பரவியதையடுத்து, ஆலையை சுற்றி 3 கிமீ சுற்றளவில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.