வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது பண்ணிப்பிற்கு அமைய 306 கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
எனினும் தமிழ் அரசியல் கைதிகள் எவரையும் விடுவிக்கும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
வெசாக் தினமான நாளை கைதிகள் விடுதலையாகவுள்ள நிலையில் அது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கும் வகையில் சிறைகளில் ; தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் நன்னடத்தை அடிப்படையில் 223 கைதிகளை விடுதலை செய்யவும் அதேபோல் விசேட கவனம் செலுத்தப்பட்டு சிறிய குற்றங்களில் ஈடுபட்டவர்களின் ; 83 பேரையும் விடுதலை செய்ய இணக்கம் காணப்பட்டுள்ளது. எனினும் இவர்களின் பாரிய குற்றங்களில் ஈடுபட்ட, போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட எவரும் விடுவிக்கப்படவில்லை.
போதைப்பொருள் கடத்தல்களை பாரிய அளவில் முன்னெடுக்கும் குற்றவாளிகள் சிலர் இப்போதும் சிறைச்சாலையில் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு பொதுமன்னிப்பு என்பது ஒருபோதும் வழங்கப்படாது.
அதுமட்டும் அல்ல இவ்வாறு நாட்டுக்குள் போதைப்பொருள்களை கொண்டுவரும் நபர்களை தடுக்கவும், நாட்டில் போதைபொருள் பாவனையை கட்டுப்படுத்தவும் இவ்வாறான குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. இது குறித்து ஜனாதிபதியுடன் நாம் பேசி ஒரு தீர்மானம் எடுப்போம்.
கேள்வி:- தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அண்மையின் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரதமரிடத்தில் வலியுறுத்தியுள்ளனர். அவ்வாறு எவரையும் விடுவிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதா?
பதில் :- அவ்வாறு எவரும் இல்லை, ஜனாதிபதி அவ்வாறு எந்த காரணிகள் குறித்தும் எமக்கு அறிவிக்கவும் இல்லை. இது பொதுவாக வெசாக் தினத்தில் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படும் நடவடிக்கையாகும். நீண்டகால தடுப்பில் குறிப்பாக பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக தடுத்து வைக்கப்பட்டவர்கள் குறித்து தீர்மானம் எடுக்க முடியாது. அவர்களை விடுதலை செய்வது ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமைய இடம்பெறும் என்றார்.