வடக்கில் அபிவிருத்தியடைந்து வரும் நன்னீர் மீன்பிடி-450000 மீன்குஞ்சுகள் மாமுனை ஏரியில் விடப்பட்டன(படங்கள்)

340 0

fish-1வடக்கு மாகாணத்தில் உள்ள நன்னீர் மீன்பிடி சங்கங்களை வாழ்வாதாரத்தில் ஊக்குவிக்கும் திட்டத்திற்கு அமைய, ஏற்கனவே மாகாணத்தில் உள்ள பல நன்னீர் மீன்பிடி சங்கங்களுக்கு அப்பகுதிக் குளங்களில் நன்னீர் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.

இதற்கமைய வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள மருதங்கேணி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாமுனை ஏரியில் மீன்குஞ்சுகள் விடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

வடமாகாண மீன்பிடி அமைச்சின் 2016ஆம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 4இலட்சத்து 50ஆயிரம் மீன்குஞ்சுகள் கொள்வனவு செய்யப்பட்டு குறித்த ஏரியில் விடப்பட்டுள்ளன.

இவ் ஏரியில் சுமார் 120இற்கு அதிகமான குடும்பங்கள் வாழ்வாதார தொழிலாக மீன்பிடியில் ஈடுபட்டு வருவதுடன், அவர்கள் தற்பொழுது நாளந்த நிகர வருமானமாக 1500–2000 வரை பெற்றுவருவதாக தெரிவித்தனர்.

மேலும் தற்போது விடப்பட்ட மீன்குஞ்சுகள் மூலம் இன்னும் ஆறுமாத காலப்பகுதியில் தமது வருமானத்தை பன்மடங்கு பெருக்கமுடியுமெனவும் அப்பகுதி மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

குறித்த நிகழ்வானது மருதங்கேணி பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் வடக்கு மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன், இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட பொறுப்பதிகாரி சலீபன், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், கிராமசேவகர்கள், பிரதேச செயலக அலுவலர்கள், மீனவ சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் குறித்த பகுதி கிராமமட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

fish-2 fish fish-1 fish-3