குண்டு துளைக்காத வாகனம்! சிக்கலில் கருணாவின் மனைவி!

293 0

karuna-wifeகடந்த அரசாங்கத்தின் போது கருணா எனப்படும் விநாயமூர்த்தி முரளிதரன் பயன்படுத்தியதாக கூறப்படும் குண்டு துளைக்காத ஜீப் வண்டி ஒன்று அண்மையில் மட்டக்களப்பு பிரதேச வாகன திருத்துமிடத்தில் இருந்து மீட்கப்பட்டிருந்தது.

7 கோடி ரூபா பெறுமதியான இந்த குண்டு துளைக்காத வாகனம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்று பெற்றுக் கொள்வதற்காக கருணாவின் மனைவி நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஜீப் வண்டி கருணாவின் சாரதி ஒருவரினால் குறித்த வாகன திருத்துமிடத்திற்கு கொண்டு வந்து விட்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்து பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த ஜீப் வண்டியை சுங்க பிரிவில் இருந்து விடுவித்துக் கொள்வதற்காக முன் வந்துள்ள அப்போதைய பொறுப்பு கூற வேண்டிய அதிகாரி தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த ஜீப் வண்டி கடந்த அரசாங்கத்தின் போது சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டதா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த குண்டு துளைக்காத ஜீப் வண்டி பதிவு செய்யாமல் சீ.சீ இலக்க தகடுடன் பயணித்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.