சிறிலங்காவில் ஈஸ்டர் தாக்குதலை பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல, கொரோனா விவகாரத்தைப் பயன்படுத்தி ஆட்சியதிகாரத்திற்கு வரவே ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினர் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள் என சஜித் ஆதரவு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், அவசர அவசரமாக பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தி, இரண்டு மூன்று மாதங்களில் அதிகாரத்திற்கு வரத் தான் அரசாங்கம் தற்போது முயற்சி செய்து வருகிறது.
இதற்காக கொரோனாவை அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
சஹ்ரானினால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றது போது, இம்முறை கொரோனாவினால் பொதுத் தேர்தலிலும் வெற்றிப் பெறத்தான் இவர்கள் முயற்சித்து வருகிறார்கள்.
தயவு செய்து இந்த விவகாரத்தை அரசியலாக கருத வேண்டாம் என நான் வேட்டுக் கொள்கிறேன்.
இதுதொடர்பான கருத்துக்களை ஐக்கிய மக்கள் சக்தி என்ற ரீதியில் நாம் கூறும்போது, மைத்திரி- ரணில் ஆட்சியின் பின்னடைவுகள் தொடர்பாக கூறுகிறார்கள்.
அது உண்மைதான். அந்த ஆட்சியாளர்கள் சரியில்லாத காரணத்தினால் நாம் பிரிந்து வந்து புதியக் கூட்டணியொன்றை ஆரம்பித்தோம்.
எனினும், துரதிஷ்டவசமாக எமக்கு ஆட்சியதிகாரம் கிடைக்கவில்லை. அவ்வாறு கிடைத்திருந்தால், நிச்சயமாக கொரோனா நிலைமையை நாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்போம்.
எனவே, மைத்திரி- ரணிலை எம்முடன் இணைத்து பேச வேண்;டாம் என நான் இவ்வேளையில் குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
நாம் கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும், ஆட்சியாளர்கள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டுதான் இருந்தோம். இதனால் தான் பிரிந்தும் வந்தோம்’ என்றார்.