சட்டபூர்வ அதிகாரம் நாடாளுமன்றுக்கே இருக்கின்றது, இல்லையெனில் அதிகாரங்களை நிரூபிக்குமாறு மங்கள சவால்

369 0

ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியில் இருந்து எப்போதோ மீண்டும் நாடாளுமன்றம் கூட்டப்படும் வரை அரச நிதியை செலவிடுவதற்கான சட்டபூர்வ அதிகாரம் நாடாளுமன்றத்தால் மாத்திரமே வழங்கப்பட முடியும் என சிறிலங்காவின் முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்காவின்ஜனாதிபதியின் செயலாளர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திற்கு பதில் கடிதம் ஒன்றினை எழுதியுள்ள அவர், குறித்த திகதியில் இருந்து பொதுத்தேர்தலை நடத்தி புதிய நாடாளுமன்றத்தை கூட்டும் நாள் வரை அரச செலவீனங்களை மேற்கொள்வதற்குள்ள அதிகாரங்களை நிரூபிக்குமாறும் அவர் சவால் விடுத்துள்ளார்.

அரசியலமைப்பின் 150/4 ஆவது சரத்தின் பிரகாரம் பொதுத்தேர்தலுக்கான செலவீனங்களுக்காக ஒன்றிணைந்த நிதியத்திலிருந்து நிதியை விடுவிக்கவும் செலவிடுவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளதாக மங்கள சமரவீர ஜனாதிபதியின் செயலாளருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த நிலைமை தவிர்ந்த அரசியலமைப்பின் 150/3 ஆம் சரத்தின் ஏற்பாடுகளுக்கு புறம்பாக, அரச சேவைகளுக்காக ஒன்றிணைந்த நிதியத்திலிருந்து நிதியை பெறவோ செலவிடவோ உரிய அதிகாரம் வழங்கும் ஏற்பாடுகள் அரசியலமைப்பில் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியில் இருந்து எப்போதோ மீண்டும் நாடாளுமன்றம் கூட்டப்படும் வரை அரச நிதியை செலவிடுவதற்கான சட்டபூர்வ அதிகாரம் நாடாளுமன்றத்தால் மாத்திரமே வழங்கப்பட முடியும் என மங்கள சமரவீர ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜுன் 20 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தாலும் புதிய நாடாளுமன்றம் கூடும் திகதி இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் அரசியலமைப்பின் 148 ஆவது சரத்திற்கு அமைய அரச நிதி தொடர்பிலான முழுமையான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளதாக மங்கள சமரவீர வலியுறுத்தியுள்ளார்.

புதிய நாடாளுமன்றம் கூடும் வரை அரச ஊழியர்களுக்கான சம்பளம் வழங்குவது உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான நிதியை செலவிடுவதற்கான அனுமதியை பெற நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்றும் மங்கள சமரவீர ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.