மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் – 22-ம் தேதி வரை செலுத்தலாம்

298 0

பொதுமக்கள் மின்சார கட்டணத்தை வரும் 22-ம் தேதி வரை தாமத கட்டணம் மற்றும் மறு மின் இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, மின்சார வாரியத்துறை அமைச்சர் பி.தங்கமணி, மின்சார வாரிய அதிகாரிகளுடன் நடத்திய கலந்தாய்வின்படி சில வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது, முந்தைய மாத கணக்கீட்டின்படி மின்சார கணக்கீடு செய்யப்பட்ட தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவன நுகர்வோர்கள் மின்சார கட்டணத்தை முந்தைய மாத கணக்கீட்டின்படியோ அல்லது மின் அளவியில் உள்ள மின்சார நுகர்வுக்கு ஏற்ப திருத்தப்பட்ட பட்டியல்படியோ வரும் 22-ம் தேதி வரை செலுத்தலாம்.
வீட்டு உபயோக மின்சார நுகர்வோர்களைப் பொறுத்தவரை எங்கெல்லாம் முந்தைய மாத கணக்கீட்டு தொகையின்படி கணக்கீடு செய்யப்பட்டுள்ளதோ, அங்கு அடுத்த மின்சார கணக்கீடு அதற்குரிய தேதியில் எடுக்கப்படும். அவ்வாறு கணக்கீடு செய்யப்பட்ட மின் அளவீட்டிற்கான தொகையில், முந்தைய மாத மின் கணக்கீட்டின்படி செலுத்தப்பட்ட தொகையானது சரி செய்யப்படும்.
கடந்த மார்ச் 25-ம் தேதியில் இருந்து வரும் 17-ம் தேதி வரை மின்சார கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ள நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பிற்கான மின்சார கட்டணத்தை வரும் 22-ம் தேதி வரை தாமத கட்டணம் மற்றும் மறு மின் இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம்.
மேற்கண்ட தகவலை மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.