தெலுங்கானாவில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு

367 0

தெலுங்கானாவில் பொது ஊரடங்கு மே 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 46 ஆயிரத்து 711 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 31 ஆயிரத்து 967 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பரவியவர்களில் நாடு முழுவதும் இதுவரை 13 ஆயிரத்து 160 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு ஆயிரத்து 583 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக தெலுங்கானா மாநிலத்திலும் கொரோனா பரவத்தொடங்கியுள்ளது. மத்திய அரசின் தகவலின் படி தெலுங்கானாவில் ஆயிரத்து 85 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 585 பேர் சிகிச்சைகு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், அம்மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே – 17 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும், வைரஸ் பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பல மாநில அரசுகள் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டத்தில் உள்ளன.
கோப்பு படம்
இந்நிலையில், தெலுங்கானாவில் மே 29-ம்  தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் இன்று அறிவித்துள்ளார்.
ஊரடங்கின் போது மக்கள் மாலை 6 மணிக்கு முன்னதாகவே அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு தங்கள் வீடுகளுக்கு சென்று விட வேண்டும்.
இரவு 7 மணி முதல் முழு ஊரடங்கு செயலில் இருக்கும். அந்த நேரத்தில் யாரேனும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தால் போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.