சிகையலங்கார நிலையங்கள், ஒப்பனை நிலையங்களை மீண்டும் திறக்க அனுமதி

331 0

சிகை அலங்கார நிலையங்கள் மற்றும் ஒப்பனை நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. அழகுக்கலை நிபுணர்கள் மற்றும் சுகாதார அமைச்சருக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சிறிலங்காவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட் – 19 வைரஸ் பரவலை தடுப்பதை நோக்காக கொண்டே நாட்டிலுள்ள ஒப்பனை நிலையங்கள் மற்றும் சிகை அலங்கார நிலையங்களை மூடுமாறு சிறிலங்காவின் சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு அனுமதிப் பெற்றுத்தருமாறு அழகுக்கலை நிபுணர்கள் சிலர் நேற்று திங்கட்கிழமை சுகாதார அமைச்சிடம் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

பின்னர் இது தொடர்பில் கவனம் செலுத்திய சுகாதார அமைச்சி  இது தொடர்பில் அவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதுடன், மீண்டும் திறப்பதற்காக அனுமதியையும் வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக ஒப்பனை நிலையங்கள் மற்றும் சிகை அலங்கார நிலையங்களை மூடுமாறு அரசாங்கம் தெரிவித்திருந்தாலும், எந்தவித சுகாதார பாதுகாப்பு செயற்பாடுகளுமின்றி தோட்டப்புறங்களில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், கொரோனா வைரஸினால் உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தல் தோற்றம் பெற்றிருந்தாலும், இலங்கையை பொறுத்தமட்டில் அதனை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியும் எனவும் அழகுகக்கலை நிபுணர்கள் சுகாதார அமைச்சுக்கு தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சுகாதார அமைச்சி அவர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதுடன், சிகை அலங்கார நிலையம் மற்றும் ஒப்பனைநிலையங்களை திறந்தாலும் , முடிவெட்டுதல் போன்ற அத்தியாவசிய சேவைகளை மாத்திரமே செயற்படுத்துமாறும், இதன்போது சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைய செயற்படுமாறும் தெரிவித்துள்ளதுடன், சேவைகள் வழங்கும் போது நபர்களுக்கு இடையிலான இடைவெளியை பேண வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் அவர்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளது. மேலும், சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கமைய இந்த சேவைகள் வழங்கப்படுகின்றதா என்பது தொடர்பில் சுகாதார பிரிவினர் மேற்பார்வை செய்வதாகவும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

இதேவேளை இந்த கலந்துரையாடலின் போது சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி , சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க மற்றும் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் எல்.டி.கம்லத் உள்ளிட்ட வைத்திய பிரிவினரும், அழகுக்கலை நிபுணர்கள் பலரும் இணைந்துக் கொண்டிருந்தனர்.