வயோதிபத் தம்பதியைத் தாக்கிவிட்டு சுமார் 15 பவுண் தங்க நகைகள் கொள்கைகள்!

318 0

யாழ்ப்பாணம் – உடுவில், அம்பலவாணர் வீதியில் இன்று (05) அதிகாலை வீடு ஒன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் ஒன்று வயோதிபத் தம்பதியைத் தாக்கிவிட்டு சுமார் 15 பவுண் தங்க நகைகள் மற்றும் 5 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பித்துள்ளது.

வயோதிபத் தம்பதியைக் கட்டி வைத்துவிட்டு குடும்பத் தலைவரின் தலையில் கூரிய ஆயுதத்தால் கொத்தி கொள்ளைக் கும்பல் சித்திரவதை செய்துள்ளது. இதில் படுகாயமடைந்த குடும்பத்தலைவர், தெல்லிப்பழை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

‘வீட்டுக்குள் நுழைந்த 3 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல், எங்களைக் கட்டிவைத்தது. கணவரின் தலையில் கூரிய ஆயுதத்தால் கொத்தியது. எனது கன்னத்தில் அறைந்தது, இதனால் நாம் நிலைகுலைந்தோம்.

சுமார் 3 மணிநேரம் சல்லடை போட்டு தேடுதல் நடத்தி, நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டு கும்பல் தப்பித்தது’ என்று குடும்பப் பெண் விசாரணையில் தெரிவித்தார்.

‘கொள்ளையர்கள் மூவரும் 20 தொடக்கம் 24 வயதுக்கு உட்பட்டவர்களாக தான் இருக்கும். அவர்களில் ஒருவன் கைகளில் கையுறை போட்டிருந்தான்.

வீட்டில் பிள்ளைகளின் நகைகளுடன் 15 பவுண் நகைகள் இருந்தன. 5 இலட்சம் ரூபாய் பணமும் இருந்தது. அவை கொள்ளையிடப்பட்டுள்ளன’ என்றும் அவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மோப்ப நாய் அழைத்துவரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.