ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு சொந்தமான அலுவலகத்திலிருந்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
புத்தளம் முந்தல், மதுரங்குளியில் நடத்திச் செல்லப்பட்ட குறித்த பயிற்சி நிலையம், தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுடன் பயிற்சி நிலையமொன்றை நடத்திச்சென்ற சந்தேகநபர் ஒருவர் கற்பிட்டி பகுதியில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.
தாக்குதல்தாரிகளின் கருத்துக்களை பிரசாரம் செய்யும் நோக்கில் குறித்த நபர் பயிற்சி நிலையத்தை நடத்திச் சென்றுள்ளமை, கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. சந்தேகநபர் தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று இதுதொடர்பாக அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு சொந்தமான அலுகவலத்திலிருந்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு 15, மட்டக்குளியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றின் இரண்டாம் மாடியில் அமைந்துள்ள குறித்த அலுவலகம் நேற்று குற்றப்புலனாய்வுப் பிரிவினாரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேக நபர் நடத்தி வந்த அரச சார்பற்ற நிறுவனம் குறித்த விபரங்கள், குறித்த அமைப்புக்கு நிதி வழங்கியவர்களின் தகவல்கள் என்பன கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த அலுவலகம் சீல் வைக்கப்பட்டு, பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், குறித்த அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பற்றுச் சீட்டுகள், புத்தகங்கள், சஞ்சிகைகளை சிறப்புக் குழு ஆய்வு செய்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.