இலங்கை மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில், குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தமொன்றை விரைவில் கைச்சாத்திடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதுகுறித்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
குற்றங்களை தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துவதில் இலங்கை மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளுக்குமிடையில் பயனுள்ள ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, சந்தேகநபர்களை குறித்த நாட்டுக்கு அனுப்புதல் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை இலகுபடுத்தும் நோக்கில் இவ் ஒப்பந்தம் கைச்சாத்தாகவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.