கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள், சுகாதார ரீதியில் அவர்களுக்கென முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக கூறி வடக்கு கிழக்கில் தமிழர்களின் விவசாய நிலங்களை இராணுவம் ஆக்கிரமிப்பதை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் எடுத்துரைத்துள்ளனர்.
கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளை கையாளும் ;விதமாக அரசாங்கம் இதுவரை முன்னெடுத்து வருகின்ற நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தும் வகையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலருக்கும் பிரதமர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த சந்திப்பு இன்று அலரிமாளிகையில் இடம்பெற்றது.
இதில் எதிர்க்கட்சி சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே கலந்துகொண்ட நிலையில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்திடம் எடுத்துரைத்துள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சீனித்தம்பி யோகேஸ்வரன், சார்ல்ஸ் நிர்மலநாதன், ஸ்ரீதரன், வைத்தியர் சிவமோகன், கோடிஸ்வரன், ஸ்ரீநேசன் ஆகியோர் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து பிரதமரை வலியுறுத்துகையில் கூறியதானது, கொரோனா வைரஸ் தொற்றுநோய் படிப்படியாக மோசமடைந்து வருகின்றது.
எமது நாட்டிலிருந்து அதனை முழுமையாக ஒழிப்பதற்கு இன்னும் அதிகமான வேலைகள் செய்யப்படவேண்டும். இந்த வைரஸ் தொற்றின் ; மூலமாக பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மக்கள் அச்சமடைகின்றனர். ஆகவே இவ்வாறான நெருக்கடியில் மக்களை பாதுகாக்கும் ஒன்றிணைந்த வேலைத்திட்டங்கள் தேவைப்படுகின்றது.
அதேபோல் நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியில் உள்ள நிலையில் வடக்கு கிழக்கில் பொதுமக்களின் காணிகளில் விவசாய பூமிகள் அனைத்தையும் இராணுவம் கையில் எடுத்து விவசாயம் செய்ய தீர்மானம் எடுத்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றது. இதனை கைவிட வேண்டும். எமது மக்களின் பூமியில் அவர்களின் விவசாயத்தை முன்னெடுக்க இடமளிக்க வேண்டும். அதற்கான சகல உதவிகளையும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
மேலும் நாட்டின் சுகாதார கட்டமைப்பை பொறுத்தவரை மாவட்ட ரீதியில் சுகாதார கட்டமைப்புகள் பலப்படுத்தப்படுமென அரசாங்கம் மற்றும் அதிகாரிகள் கூறுகின்ற அதேவேளையில் கொழும்பில் அகப்படும் கொரோனா தொற்றாளர்கள் ஏன் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதனால் வடக்கு கிழக்கில் மக்கள் பாதுகாப்பின்மையை உணர்கின்றனர்.
ஆகவே அவ்வாறான செயற்பாடுகள் இனியும் இடம்பெறக் கூடாது. அதேபோல் தான் தனிமைப்படுதல் செயற்பாடுகளில் பாடசாலைகள் பயன்படுத்தப்படுவதாக கூறுவதும் உடனடியாக கைவிடப்பட வேண்டும். அதேபோல் இந்த வைரஸ் தொற்றுநோய் பரவல் விடயத்தில் அரசாங்கம் மேலும் பல சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். மக்களை பாதுகாக்க சுகாதார ரீதியிலான வேலைத்திட்டங்களே அவசியமாகும். அதனை சுகாதார அமைச்சும் அரசாங்கமும் அரச வைத்திய அதிகாரிகளும் கவனத்தில் கொள்வது ஆரோக்கியமானதாக அமையும்.
கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த நாடு முடக்கப்பட்டுள்ள காரணத்தினால் நாளாந்த தொழிலை நம்பி வாழும் பல இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கை பொருத்தவரை மிக அதிகமானவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
<p>ஆகவே அரசாங்கம் இவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு ரூபாய் 5 ஆயிரம் வழங்குவதாக கூறியுள்ள போதிலும் அது போதுமான உதவியாக இருக்காது. எனவே அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கபட வேண்டும் என்பதை அரசாங்கத்திற்கு வலியுறுத்துகின்றோம்.
மேலும் வெளிமாவட்டங்களில் இருப்போர் கொழும்பு புத்தளம் உள்ளிட்ட பகுதிளில் பணிபுரிகின்ற நிலையில் அவர்கள் மீண்டும் அவர்களின் சொந்த இடங்களுக்கு செல்ல முடியாத நிலையே உருவாகியுள்ளது. ஆகவே அவர்களை உரிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டிய துரித நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் பலர் இன்று கொழும்பில் சிக்கியுள்ளனர். இதனால் வருமானமும் இல்லாது அதேபோல் பாதுகாப்பும் இல்லாத நிலைமையே உருவாகியுள்ளது. இதன் மிக மோசமான விளைவாக மட்டக்களப்பில் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாள். இவ்வாறான மோசமான சம்பவங்கள் இனியும் இடம்பெறாத வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அதேபோல் கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் காரணமாக எவரும் பாதிக்கப்படாத வகையில் மக்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய கசாயம் போன்றவற்றை வழங்க சுதேச வைத்திய அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும். சகலருக்கும் கசாயம் போன்ற ஆரோக்கியமான மருத்துவ பானங்களை வழங்க அதற்கான நிதி ஒதுக்கீடுகளை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட வேண்டும் என்ற பல காரணிகளை பிரதமரிடத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.