அரசாங்கத்தின் பிம்பத்தை சீர்குழைப்பதே எதிர்க்கட்சியின் நோக்கம் என்கிறார் மஹிந்த ராஜபக்ஸ!

298 0

கொரோனா ஒழிப்பு திட்டத்தை தோற்கடித்து பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத்தின் பிம்பத்தை சீர்குழைப்பதே எதிர்க்கட்சியின் நோக்கம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தடுப்பு திட்டம் உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது சிறந்த நிலையில் உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை எதிர்க்கட்சிகளுக்கு பாதகமாக இருப்பதால், பழைய நாடாளுமன்றத்தை கூட்டி அரசாங்கத்தின் பணத்தை வீணடிப்பதே எதிர்க்கட்சியின் நோக்கம் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் அரசியல் நெருக்கடி மற்றும் கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் வகையில் வெயிட்டுள்ள அறிக்கையில் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன,

´ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் முழு அரச யந்திரமும் கொரோனா வைரஸை ஒழிக்க கடும் பிரயத்தனம் எடுத்து வருவதை மக்கள் அறிவர். அதன் நன்மைகளையும் மக்கள் அனுபவிக்கின்றனரர்.

இந்த மாபெரும் தேசிய பேரழிவு மற்றும் உலக பேரழிவின் மத்தியில், கலைக்கப்பட்ட பழைய பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும், ஏப்ரல் 30 ஆம் திகதிக்குப் பின்னர் பழைய பாராளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் கொரோனா ஒழிப்பு திட்டம் உள்ளிட்ட அரசு சேவைகளை முன்னெடுப்பதற்கு நிதி ஒதுக்க அரசாங்கத்திற்கு சட்ட ரீதியான அதிகாரம் இல்லை, என தெரிவித்து ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தில் உள்ளவர்களையும் எதிர்க் கட்சிகள் அச்சுறுதுகின்றன.

மார்ச் மாத ஆரம்பத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அப்போது இலங்கையில் ஒரு கொரோனா நோயாளி மட்டுமே அடையாளம் காணப்பட்டிருந்தார். ஆனால் கொரேனா தொற்றாளர்கள் அதிகரிக்க அதிகரிக்க பொதுத் தேர்தலும் ஜூன் 20 வரை ஒத்திவைக்கப்பட்டது.

சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவிற்கு உள்ள அதிகாரங்களின்படி, அவர்கள் சரியான நேரத்தில் தேர்தல்களை நடத்துவார்கள்.

அரசியலமைப்பின் 150 (3) ஆவது பிரிவின் கீழ், முந்தைய அரச ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நிறைவேற்றாத நிலையில் நாட்டின் சேவைகளுக்கு பணம் செலவழிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அவர்கள் இப்போது வாதிடுகின்றனர்.

ஏப்ரல் 30 க்குப் பிறகு பணத்தை செலவழிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று அவர்கள் வாதிடுகின்றனர், ஏனெனில் முன்னைய நல்லாட்சி அரசாங்கம் 2020 ஏப்ரல் 30 வரை கணக்கீட்டு வாக்கெடுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இது முட்டாள்தனம். அரசியலமைப்பின் 150 (3) ஆவது பிரிவின் கீழ், பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றத்தால் கையகப்படுத்தப்படாத எந்தவொரு விடயத்திற்கும் பணத்தை ஒதுக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு.

இந்த விஷயத்தில் பாராளுமன்றத்தால் ஒதுக்கப்பட்ட பணம் இருந்தால் ஜனாதிபதியின் தலையீடு தேவையில்லை. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்த ஜனாதிபதி பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டவில்லை என்பது எதிர்க்கட்சியின் மற்றொரு குற்றச்சாட்டு.

அந்த பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதைக் கண்காணிக்க பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். அரசாங்கத்தால் பெறப்பட்ட அனைத்து பணமும் மத்திய வங்கியின் தொடர்புடைய அமைப்பு மூலம் திறைசேரிக்கு செல்கின்றது.

அந்த பணத்தை செலவழிக்கும்போது ஒரு குறிப்பிட்ட நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.

புதிய பாராளுமன்றம் கூடியதும், பழைய பாராளுமன்றம் புதிய நாடாளுமன்றத்திற்கு கலைக்கப்பட்ட காலத்திலிருந்து அரசாங்கத்தின் பணம் எவ்வாறு செலவிடப்பட்டது என்பது குறித்த கேள்விகளை எழுப்ப எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு கிடைக்கும். அதுவரை அவர்கள் மக்களிடம் பொய் கூறுவதை தவிர்க்க வேண்டும்.

தேர்தல்கள் மற்றும் அரசியல் பற்றிய பேச்சைத் தவிர்த்து, கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கும், பொதுமக்கள் வாழ்க்கையை இயல்பாக்குவதற்கும் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா

கொரோனா ஒழிப்பு போராட்டத்தில் சுகாதார ஊழியர்கள், இராணுவத்தினர், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸார் ஆகியோர் அயராது கஸ்டப்படுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெளிவாகிறது.

இந்த ஹீரோக்களை ஆதரிக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதையும் நான் நினைவூட்ட விரும்புகிறேன்.´ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.