முயல்களை வேட்டையாடி டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்ட மாணவர்கள் – ரூ.90 ஆயிரம் அபராதம்

297 0

முயல்களை வேட்டையாடி டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்ட பள்ளி மாணவர்கள் 6 பேருக்கு வன அதிகாரிகள் ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்தனர்.தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள எட்டுப்புளிக்காடு கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் 6 பேர், அங்கு உள்ள வனப்பகுதியில் வலை விரித்து காட்டு முயல்களை வேட்டையாடி உள்ளனர். பின்னர் அங்குள்ள வயலில் முயல்களை சமைத்து விருந்து நடத்தி உள்ளனர். தாங்கள் செய்த தவறை உணராத அவர்கள், விருந்து சாப்பிட்டதை வீடியோ எடுத்து ‘டிக்-டாக்’ செயலியில் பதிவேற்றம் செய்தனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

இதுபற்றி தகவல் அறிந்த பட்டுக்கோட்டை வனத்துறை அதிகாரிகள் டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்ட மாணவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் 6 பேரும் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் என்பது தெரியவந்தது.

அவர்கள் 6 பேரையும் வன அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது 6 பேரும் தங்கள் தவறை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து பிடிபட்ட 6 பேருக்கும் தலா ரூ.15 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

வனவிலங்குகளை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம் என்றும், அவற்றை வேட்டையாடுபவர்கள் மீது இனிவரும் காலங்களில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.