ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித்திரிந்த இளைஞர்களை, கும்மி அடிக்க வைத்து போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும், சிலர் அதனை மீறி சாலைகளில் சுற்றித்திரிகின்றனர். இதனால் போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு சாலைகளில் சுற்றித்திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்கு மற்றும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் ஊரடங்கை மீறி சாலைகளில் வருபவர்களை பிடிக்கும் போலீசார் தோப்புக்கரணம் உள்ளிட்ட பல்வேறு நூதன தண்டனைகளையும் வழங்கி வருகிறார்கள்.
இந்தநிலையில் கோவையை அடுத்த சூலூர் பகுதியில் ஊரடங்கை மீறி சாலைகளில் சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு போலீசார் நூதன தண்டனை அளித்தனர். சாலைகளில் சுற்றித்திரிந்த இளைஞர்கள் சிலரை சூலூர் போலீஸ் நிலைய போலீசார் மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவர்களை வட்டமாக நிற்க வைத்து, கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு கும்மி பாட்டு பாடும்படி தண்டனை வழங்கினர்.
அதன்படி இளைஞர்கள் பாட்டு பாடியபடி கும்மி அடித்தனர். சாலைகளில் தேவையின்றி சுற்றித்திரியும் நபர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, இதுபோன்ற நூதன தண்டனை வழங்கினால் அவர்களுக்கு மீண்டும் அதுபோல் தவறு செய்யும் எண்ணம் வராது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.