ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் வேலைக்கு சேர்க்க வீட்டு உரிமையாளர்கள் மறுப்பதாக வீட்டு வேலை செய்யும் பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால் பல்வேறு தொழில்கள் முடங்கியதுடன், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும் தனியார் அமைப்புகள் கொடுக்கும் நிவாரணத்தை மட்டுமே நம்பியிருந்தனர்.
கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு வீடுகளின் உரிமையாளர்கள் வீட்டு வேலை செய்யும் பெண்களை வேலைக்கு வரவேண்டாம் என கூறிவிட்டனர்.
தற்போது 3ம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர், புதிய தொழில் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அதில், கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலம் மற்றும் குறைந்த பாதிப்பு உள்ள ஆரஞ்சு மண்டலங்களில், வீட்டு வேலை செய்யும் பெண்களை வேலைக்கு அனுமதிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. ஆனால், வீட்டு வேலைக்காக பெண்கள் மீண்டும் செல்லும்போது, வீட்டு உரிமையாளர்கள் அவர்களை வேலைக்கு சேர்க்க தயங்குகின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்திருப்பதால், வெளி நபர்களுடனான தொடர்பை முற்றிலும் தவிர்க்கவே மக்கள் விரும்புகின்றனர். குறிப்பாக கொரோனா அச்சம் காரணமாக வீட்டு வேலை செய்யும் பெண்களை வேலைக்கு அமர்த்த விரும்பவில்லை.
சுமார் 2 மாத காலமாக வேலை இல்லாமல், வருமானம் இன்றி தவித்த வீட்டு வேலை செய்யும் பெண்கள், ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டாலும் வேலை கிடைக்காமல் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இது தொடர்பாக தங்கள் மனக்குமுறல்களை வெளிப்படுத்தி உள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்த கவுரி என்ற பெண் இதுபற்றி கூறுகையில், “நான் வேலை செய்யும் வீடுகளில் மீண்டும் வேலைக்கு வரலாமா? என்று கேட்டேன். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டார்கள். நான் வேலைக்கு சென்று இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன” என்றார்.