பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு – ஒருவர் சிக்கினார்

284 0

1791640472accident0குருநாகல் – புத்தளம் வீதியின் மாஸ்பொத பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் வைத்து பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் பஸ் ஒன்றில் ஏறி தப்பிச் சென்ற குறித்த நபர் பெல்லன்தெனிய பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று இரவு 10.00 மணியளவில் 119 என்ற அவசர தொலை பேசி இலக்கத்தின் மூலம் குருநாகல் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட கார் ஒன்று குருநாகல் – புத்தளம் வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அப் பகுதியால் சென்ற பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் அந்த காரை சோதனையிட முற்பட்டுள்ளனர். அப்போது பொலிஸாரை நோக்கி சிலர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸாரும் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டதில் காரை விட்டுவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை இந்த சம்பவத்தில் உப பொலிஸ் பரிசோதகர், கான்ஸ்டபில் உள்ளிட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 59 வயதான உப பொலிஸ் பரிசோதகர் பலியாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.