இனியும் சிறிலங்கா அரசாங்கம் மக்களை முட்டாளாக்க முடியாது – ஹேஷா வித்தானகே

376 0

நாடாளுமன்றைக் கூட்டும் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சுமத்தி, இனியும் சிறிலங்கா அரசாங்கம் மக்களை முட்டாளாக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகே தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ராஜபக்ஷவினர் இன்று ஜனாநாயகத்தினை குழி தொண்டி புதைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனை தடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் நாம் நாடாளுமன்றைக் கூட்டுமாறு வலியுறுத்தி வருகிறோம்.

ஜனாதிபதியால் எந்தவொரு நிதிக்கும் அனுமதியளிக்க முடியாத நிலைமையே காணப்படுகிறது. இதனால், இந்த சிக்கல்களிலிருந்து விடுபடவே நாம் நாடாளுமன்றைக் கூட்டுமாறு தெரிவித்து வருகிறோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை முறையாக பெற்றுக் கொடுக்கத்தான் இதனைக் கூறுகிறோம். இதனை விடுத்து, எதிர்க்கட்சிகள் சலுகைகளுக்காகத் தான் நாடாளுமன்றைக் கூட்டுமாறு கோரி வருகிறது என ஆளும் தரப்பினர் தெரிவிப்பது எல்லாம் அப்பட்டமான பொய்யாகும்.

இனியும் இந்த பொய்களை நம்ப மக்கள் தயாராக இல்லை. எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொள்ள முடியாத நிலைமையில்தான் அரசாங்கம் இருக்கிறது. இதனை புரிந்துக் கொள்ள முடியாத அளவுக்கு மக்கள் முட்டாள்கள் இல்லை என்பதையும் அரசாங்கம் புரிந்துக் கொள்ள வேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.