அம்பாறையில் மேலும் 3 தனிமைப்படுத்தல் முகாம்கள்

439 0

அம்பாறை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில், மேலும் மூன்று தனிமைப்படுத்தல் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

வெலிசறை கடற்படை முகாமில் கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து விடுமுறையில் சென்ற முப்படையினரையும், மீள அழைத்துள்ளதால் அவர்களை தனிமைப்படுத்துவதற்குரிய தங்குமிட வசதி பற்றாக்குறை காரணமாகவே, மேற்படி தனிமைப்படுத்தல் முகாம்கள் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, தெரிவித்தார்.

காஞ்சிரங்குடா கால்நடை பயிற்சி நிலையத்தில் 40 பேரும், கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையில் 114 பேரும், கல்முனை சுபத்திரா ராமர் விகாரையில் 44 பேரும் தக்கவைக்கப்பட்டுள்ளார்களெனவும், அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அம்பாறை, பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 06 பெண் தாதிய உத்தியோகத்தர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும், பணிப்பாளர் தெரிவித்தார்.

வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றிய பாணாமையைச் சேர்ந்த கடற்படைச் சிப்பாய் ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு வருகை தந்து, அங்கு கடமையாற்றும் மனைவியான பெண் தாதிய உத்தியோகத்தருடன் பழகியுள்ளதையடுத்து, 06 பெண் தாதி உத்தியோகத்தர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

குறித்த கடற்படை வீரருக்கு மேற்கொண்ட பி.சீ.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனாத் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்தே, தாதிய உத்தியோகத்தர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.