புதுச்சேரி வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கள் நாட்டு பணத்தை இந்திய பணமாக மாற்ற முடியாததால் பரிதவித்து வருகின்றனர்.
புதுவைக்கு நாள்தோறும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஒரு காலத்தில் புதுவை பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. எனவே, இது வரலாற்று சிறப்புமிக்க நகரம் என்பதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் சுற்றுலா பட்டியலில் புதுவை நகரமும் முக்கிய இடம் பிடிக்கிறது.
இதனால் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் புதுவை வருகிறார்கள். பிரான்சு நாட்டில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர்.
இப்படி வருபவர்கள் விமான நிலையத்தில் குறிப்பிட்ட அளவுக்கு தங்கள் நாட்டு பணத்தை இந்திய பணமாக மாற்றி கொள்வது வழக்கம்.
பின்னர் அவர்கள் புதுவை வந்து இங்கு தங்கி இருந்து முக்கிய இடங்களுக்கு செல்வார்கள். அப்போது புதுவையிலேயே தங்கள் நாட்டு பணத்தை இந்திய பணமாக மாற்றுவார்கள். இதற்காக புதுவையில் 20-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பணம் மாற்றும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
தற்போது 500, 1000 ரூபாய் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் வெளிநாட்டு பணம் மாற்றும் நிறுவனங்களால் வெளிநாட்டு பணத்துக்கு இந்திய பணத்தை கொடுக்க முடியவில்லை. இந்த நிறுவனங்கள் பல லட்ச ரூபாயை கையில் இருப்பு வைத்து கொண்டு வெளிநாட்டு பணத்துக்கு இந்திய பணத்தை கொடுத்து வந்தனர்.
தங்கள் தேவைக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ அதை அவ்வப்போது அவர்கள் வங்கிக்கு சென்று எடுத்து கொள்வார்கள். ஆனால், தற்போது வங்கியில் நடப்பு கணக்கு வைத்து இருப்பவர்கள் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் மட்டுமே எடுத்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
இதனால் வெளிநாட்டு பணம் மாற்றும் நிறுவனங்களால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பணத்தை மாற்றி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தங்கள் நாட்டு பணத்தை இந்திய பணமாக மாற்ற முடியாததால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் செலவுக்கு பணம் இல்லாமல் தவித்தபடி உள்ளனர். அவர்கள் கையில் வைத்திருக்கும் ஏ.டி.எம். கார்டுகள் மூலம் புதுவை ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க முடியும். அதிகபட்சமாக ரூ.2,500 எடுக்கலாம்.
ஆனால், புதுவையில் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் மூடியே கிடக்கின்றன. திறந்திருக்கும் ஒன்றிரண்டு ஏ.டி.எம்.களில் நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். இதில், வெளிநாட்டு மக்களும் வரிசையில் நின்று பணத்தை எடுக்க வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சுற்றுலா வந்த அவர்கள் நகரை சுற்றிப்பார்க்க பயன்படுத்த வேண்டிய நேரத்தை ஏ.டி.எம்.களிலும், வங்கிகளிலும் கியூவில் நிற்க செலவழிக்க வேண்டி உள்ளது. பொதுவாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்வார்கள். ஸ்டார் ஓட்டல் போன்ற உயர் அந்தஸ்து ஓட்டல்களில் தங்குவார்கள். அவர்களுக்கு இந்த 2,500 ரூபாய் பணம் ஒரு நாள் செலவுக்கு போதாது. எனவே, பணம் இல்லாமல் திண்டாடிய நிலையில் உள்ளனர்.