கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் முகாமில் உயிரிழந்த இரண்டு முதியவர்களின் உடலமும் தகனம்

338 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் முகாமில் நேற்று முந்தினம் உயிரிழந்த இரண்டு முதியவர்களின்  உடலமும் முள்ளியவளை களிக்காட்டு பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் தகனம்  செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த முதியவர் இருவர் நேற்று முந்தினம் உயிரிழந்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முந்தினம்  காலை உயிரிழந்த  80 வயதுடைய குணசிங்கபுர பகுதியை சேர்ந்த யாசகம் செய்கின்ற வேலு சின்னத்தம்பி என்பவருக்கு கொரோனா தொற்று இல்லை  என்று வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்திய நிலையில் உடலத்தை முல்லைத்தீவு குமாரபுரம் மாவடிப்புலவு இந்து மாயானத்தில் எரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் முள்ளியவளை பொலிஸார் வைத்தியசாலை  பிரேத அறையில் இருந்து  உடலத்தை வாகனத்தில்  ஏற்றிய பின்னர் வைத்தியசாலை நிர்வாகத்தினரையும் இறுதிக்கிரிகைகள் நடைபெறும் இடத்துக்கு வருமாறு அழைத்தனர்.

இதன்போது அவர்களை அழைப்பதற்கான நீதிமன்ற கட்டளை  இல்லாத நிலையில் சுமார் இரண்டுமணி நேரமாக உடலம் ஏற்றிய வாகனம் வைத்தியசாலை வளாகத்தில் இருந்தது.

இதனைத்தொடர்ந்து அந்த பிரச்சனை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு உடலம் எடுத்து செல்ல தயாரான போது முல்லைத்தீவு இளைஞர் குழு ஒன்று வருகைதந்து உடலத்தை எரிப்பதற்கு தடை விதித்தது.

அவர்கள் மின்சார சுடுகாடு இங்கு இல்லை எனவும் எமது பாதுகாப்பை கருதி உடலத்தை வவுனியாவில் உள்ள மின்சார சுடுகாட்டில் எடுத்து சென்று எரிக்குமாறும் கோரிய நிலையில் வவுனியாவில் இருந்த மின்சார சுடுகாடு  பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மக்கள் நடமாட்டம் இல்லாத முள்ளியவளை களிக்காடு காட்டு பகுதியில் எரிப்பதற்காக  முடிவெடுக்கப்பட்டு குறித்த முதியவரது உடலம் நேற்று இரவு 8 மணியளவில் களிக்காடு காட்டு பகுதியில் எரிப்பதற்காக கொண்டு செல்லப்பட்டு எரிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றது.

இதன்போது நேற்று முந்தினம் மாலை உயிரிழந்த மற்றய முதியவருக்கு கொரோனா தொற்று இல்லை என பெறுபேறு கிடைக்கப்பெற்ற நிலையில் நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு அவரது உடலமும் கொண்டுவரப்பட்டு இரண்டு உடலங்களும் நேற்று இரவு  11.30 மணியளவில் தீயுடன் சங்கமமாக்கபட்டது.