நுவரெலியாவில் முதலாவது கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் அடையாளம் காணப்பட்டார்!

308 0

சிறிலங்காவின்  நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நபர், ஹங்குராங்கெத்த திக்கல்பொத்த பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று (சனிக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக ரிகில்கஸ்கட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்தது.

வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றிய சிப்பாய் ஒருவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும், இவர் கடந்த 22ஆம் திகதி விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

எனினும், கடற்படையினரின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டதையடுத்து கடந்த 25ஆம் திகதி இவர் முகாமுக்குத் திரும்பியுள்ளார். வீட்டில் இருந்த காலப்பகுதியில் இவர் பலருடன் தொடர்பைப் பேணியுள்ளார் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

சுமார் 50 பேர் வரை தொடர்பைப் பேணியுள்ளார் என்றும், இவர்களை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும், கடற்படைச் சிப்பாயின் மனைவி, பிள்ளைகளை தியத்தலாவை கொரோனா தொற்றுத் தடுப்பு முகாமுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரிகில்கஸ்கட பொது சுகாதார பரிசோதகர் ராஜநாயக்க தெரிவித்தார்.

குறித்த கடற்படைச் சிப்பாய், முகாமுக்குச் சென்ற பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை மூலமே கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறிலங்காவில் நுவரெலியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் இதுவரை இல்லாத நிலையில் நேற்று நுவரெலியாவில் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.