10 டன் பூசணிக்காயுடன் பரிதவிக்கும் விவசாயி

287 0

2 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்ட பூசணி 3 மாத உழைப்புக்கு பின் 10 டன் அளவுக்கு காய்த்துள்ளது. பூசணிக்காய்களை குறைந்த விலைக்காவது விற்று வாங்கிய கடனை கொடுத்து விடவேண்டும் என்று விவசாயி பரிதவித்து வருகிறார்.திருப்போரூர் அருகே கோனேரிக்குப்பம் கிராமத்துச் சாலை….

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை படர்ந்து கிடக்கும் பூசணி கொடிகள். அதில் உருண்டு திரண்டு காய்த்து காட்சி தரும் பூசணிக்காய்கள்….

பார்ப்போருக்கு பரவசம் அளிக்கிறது. ஆனால் அதை பயிரிட்ட விவசாயி ராஜகோபால் பரிதாபத்தோடு வயல்கரையிலேயே கண்ணீருடன் காத்திருக்கிறார். பொழுது புலர்ந்ததும் வயல்கரைக்கு வந்து விடுகிறார். அந்த வழியாக யாராவது வியாபாரிகள், புதுமுகங்கள் சென்றால் அய்யா, இது என் தோட்டம் 10 டன் அளவுக்கு பூசணிக்காய் உள்ளது.

கிலோ 4 ரூபாய்க்கு கூட தர தயாராக உள்ளேன். யாராவது இதை வாங்கி என்னை காப்பாற்றுங்கள் அய்யா என்று அவர் கெஞ்சுவதை பார்க்க பரிதாபமாக உள்ளது. ராஜகோபாலும் அவரது மனைவியும் 3 மாதங்களுக்கு முன்பு 2 ஏக்கர் பரப்பளவில் வழக்கம் போல் பூசணி பயிரிட்டுள்ளார்கள். இதற்காக உரம், பூச்சி மருந்து வாங்குவது, வேலை செய்வது என்று ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற்றுள்ளார்.

எப்படியாவது பூசணிக்காய் நமக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு வயற்காட்டில் கணவன்-மனைவி இருவரும் கஷ்டப்பட்டு உழைத்து இருக்கிறார்கள். அவர்கள் உழைப்புக்கு நல்ல பலனும் கிடைத்தது. பூசணிக்காய் அற்புதமாக காய்த்து விளைந்தது. ஆனால் எங்கிருந்தோ வந்த கொரோனா ராஜகோபாலின் விவசாயத்தோடும் விளையாடி விட்டது. வழக்கமாக கிலோ 10 ரூபாய் முதல் 12 ரூபாய்க்கு விற்பனை செய்வார். ஆனால் இப்போது வாகன போக்குவரத்து இல்லாமலும், வாங்குவதற்கு ஆட்கள் இல்லாமலும் அப்படியே செடியில் கிடக்கிறது.

குறைந்த விலைக்காவது விற்று வாங்கிய கடன் 50 ஆயிரம் ரூபாயையும் கொடுத்து விட வேண்டும் என்று தவித்துக்கொண்டிருக்கிறார். வழக்கமாக பூசணிக்காய் கொடுக்கும் கோயம்பேடு சந்தைக்கு தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். ஆனால் வியாபாரிகளோ விவசாயியின் வயிற்றில் அடித்து அடிமாட்டு விலைக்கு அதாவது கிலோ 1 ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறேன்.

ஆனால் கோயம்பேட்டுக்கு உன் செலவில்தான் அனுப்பி வைக்க வேண்டும் என்று சொல்லி உள்ளார்கள். லாரி வாடகை, ஏற்று கூலி, இறக்கு கூலி, இதர செலவுகள் அனைத்தையும் கணக்கிட்டால் விற்ற காசை விட கூடுதலாக அவர் கையில் இருந்துதான் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது கோயம்பேட்டில் ஒரு கிலோ பூசணிக்காய் ரூ.8 முதல் ரூ.10 வரை விற்கிறது.

கொரோனா தாக்கத்தில் சிரமப்படும் ஒவ்வொருவருக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்பவர்களும் இருக்கிறார்கள். அதே நேரத்தில் மரணம் துரத்தும் இந்த நேரத்திலும் பணத்துக்காக விவசாயிகளின் வயிற்றில் அடிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

யாராவது கை கொடுப்பார்களா? என்று ராஜகோபால் காத்துக் கொண்டிருக்கிறார். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாக சொல்வதுண்டு. ஆனால் இந்த பரிதாபத்துக்குரிய விவசாயி தன் முழு சோகத்தை மறைக்காமல் சொல்லி விட்டார். நல்ல மனம் படைத்த வியாபாரிகள் அல்லது நிறுவனங்கள் இவருக்கு கை கொடுப்பார்களா? தொடர்புக்கு-98844 82094.