சென்னையில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்ற, ஆதார் அட்டையை ஒரு முறைக்கு மேல்கொண்டு வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
சென்னையில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்ற, ஆதார் அட்டையை ஒரு முறைக்கு மேல்கொண்டு வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
புழக்கத்தில் உள்ள ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் அதை மாற்ற வங்கிகள் முன்பு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றனர். இவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை நகலில் கையெழுத்திட்டு, வங்கிகளில் செலுத்தி பணத்தை மாற்றி செல்கின்றனர்.
முதலில் ரூ.4 ஆயிரம் மதிப்பில் மட்டும் பணமாற்றம் செய்யப்பட்டது. இதனை ரூ.4 ஆயிரத்து 500 ஆக மாற்றி மத்திய அரசு அறிவித்தது. ஒரு வாரத்தில் சகஜநிலை ஏற்படும் என்று கருதிய வங்கி அதிகாரிகளுக்கு, நாளுக்கு நாள் வங்கிகளின் முன்பு நிற்கும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை கட்டுப்படுத்த பணம் மாற்ற வருபவர்களின் கை விரலில் மை வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த தகவலால் நேற்று காலையில் வங்கிகள் முன்பு கூட்டம் சற்று குறைவாக காணப்பட்டது. பெரும்பாலான வங்கி கிளைகளுக்கு மை வந்து கிடைக்காததால், வழக்கம் போல் மை வைக்காமல் பணமாற்றம் செய்யும் பணி நடந்தது.
இதனால் நேற்று பிற்பகலில் வங்கிகள் முன்பு மீண்டும் நீண்ட வரிசை காணப்பட்டது. ஸ்டேட் வங்கி தவிர பெரும்பாலான வங்கிகளில் மாற்றித்தருவதற்கு போதிய பணம் இல்லாததால் வங்கிகளில் வழக்கம் போல் டெபாசிட் பெறுவது, காசோலை பரிமாற்ற பணிகள் மட்டுமே நடந்தன. தபால் அலுவலகங்களை பொறுத்தவரையில் போதிய பணம் இல்லாததால் வெறிச்சோடியே காணப்பட்டன.
இதுகுறித்து ஸ்டேட் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:-
பொதுமக்களின் வங்கி கணக்கில் உள்ள பணம் பாதுகாப்பாக இருக்கும். அத்தியாவசிய தேவைக்கு மட்டும் பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. இருந்தாலும் நாளுக்கு நாள் பணம் மாற்ற வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. எதாவது ஒரு அடையாள அட்டையின் நகலில் கையெழுத்திட்டு கொடுத்து பணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி 85 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டை நகல் மூலம் பணம் மாற்றித்தரப்பட்டது. அவ்வாறு கொண்டு வரப்படும் ஆதார் அட்டை எண்கள் கணினியில் பதிவு செய்யப்படுகிறது. மீண்டும் அதே ஆதார் அட்டைகளை கொண்டு வந்தால் கணினி அதனை ஏற்பதில்லை. அவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதனால் மாற்று அடையாள அட்டைகளை பொதுமக்கள் கொண்டு வந்து பணத்தை மாற்றி செல்கின்றனர்.
குறிப்பாக குடிசை பகுதிகளில் இருப்பவர்கள் அதிகளவு வந்து பணத்தை மாற்றுவதால் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவர்கள் கமிஷன் வாங்கி கொண்டு வேறு நபர்களின் பணத்தை மாற்றுவது ஒரு சிலர் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் ரிசர்வ் வங்கி பணம் மாற்ற வருபவர்களின் கைவிரல்களில் மை வைக்க அறிவுறுத்தி உள்ளது. மைசூருவில் உள்ள ரிசர்வ் வங்கி அச்சகத்தில் இருந்து பெரும்பாலான கிளைகளுக்கு மை வந்து சேரவில்லை. நாளை (இன்று) கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். கிடைத்த உடன் மை வைக்கும் பணியை தொடருவோம். அதுவரை வழக்கம் போல் பணம் மாற்றி தரும் பணியில் ஈடுபட்டு உள்ளோம்.
வங்கிகளில் பழைய பணத்தை சேகரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு செல்லாத பணம் சேகரிக்கப்பட்டு வருகிறது. ‘ஜன்தன்’ கணக்கில் அளவுக்கு அதிகமாக பணத்தை டெபாசிட் செய்பவர்களும், கருப்பு பணத்தை டெபாசிட் செய்ய வருபவர்களும் கண்காணிக்கப்படுகின்றனர். புதிய கரன்சி நோட்டுகளை வைக்கும் வகையில் ஏ.டி.எம். எந்திரங்களும் மறு சீரமைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.